நீர்க்குழாய்க் கசிவு: ஃபேரர் பார்க் வீவக வீடுகளுக்கு நீர் விநியோகம் பாதிப்பு

நீர்க்குழாய்க் கசிவு: ஃபேரர் பார்க் வீவக வீடுகளுக்கு நீர் விநியோகம் பாதிப்பு

1 mins read
97feefeb-f928-46b0-a126-73b6d88adae8
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்ய 47 ஓவன் சாலை, 49 டார்சட் சாலை, 9 குளோஸ்டர் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் வண்டிகள் நிறுத்திவைக்கப்பட்டன. - படம்: பொதுப் பயனீட்டுக் கழகம்

நீர்க்குழாய்க் கசிவு காரணமாக ஃபேரர் பார்க் வட்டாரத்தில் உள்ள பல வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

ரங்கூன் சாலையை நோக்கிச் செல்லும் 65 டெசன்சன் சாலை அருகில் நீர்க்குழாய்க் கசிவு ஏற்பட்டதாகவும் அதுகுறித்து செப்டம்பர் 1ஆம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் தகவல் கிடைத்ததாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

நீர்க்குழாய்க் கசிவைச் சரிசெய்ய சேவைக் குழு சம்பவ இடத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டது.

நீர்க்குழாய்க் கசிவு காரணமாக அந்த வட்டாரத்தில் உள்ள பல வீவக குடியிருப்புக் கட்டடங்கள் பாதிக்கப்பட்டதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குத் தண்ணீரை விநியோகம் செய்ய 47 ஓவன் சாலை, 49 டார்சட் சாலை, 9 குளோஸ்டர் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் வண்டிகள் நிறுத்திவைக்கப்பட்டன.

நீர்க்குழாய்க் கசிவு சரிசெய்யப்பட்டு காலை 9.15 மணி அளவில் தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதாகக் கழகம் கூறியது.

“நீர்க்குழாய்க் கசிவால் டெசன்சன் சாலை சற்று சேதமடைந்துள்ளது. சாலையின் நிலையைக் கண்டறிய நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து சோதனையிடுகிறோம்,” என்று கழகம் தெரிவித்தது.

அந்தச் சாலையின் இரு வழிகளும் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்காகக் கழகம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

சாலை மீண்டும் திறக்கப்பட்டதும் தகவல் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்