பொதுவாக வீட்டைச் சுத்தம் செய்யும்போது தேவையற்ற பொருள்களைக் கண்மூடித்தனமாகக் குப்பையில் போடுவதைக் காட்டிலும் அவற்றை தேவைப்படுவோருக்கு நன்கொடையாக வழங்குவது சிறந்தது. இது அவர்களுக்கு உதவுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.
சிங்கப்பூரில், நல்ல, பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள பொருள்களை நன்கொடையாக வழங்க பல வாய்ப்புகள் உள்ளன.
குளூப்
உடை உள்ளிட்ட துணி வகைக் கழிவுகளைக் குறைக்கும் முயற்சியில் உள்ள குளூப் (CLOOP)நிறுவனம் பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ள ஆடைகளைச் சேகரிக்கிறது.
சேகரிக்கப்பட்ட துணிகள் இயன்றவரை மறுபயன்பாடு, மறுவிற்பனை அல்லது மறுசுழற்சி செய்யப்படுகிறது.
பொதுமக்கள் தேவையற்ற உடைகள் மட்டுமின்றி, போர்வை, படுக்கை விரிப்புகள், தொப்பி, காலணிகள், துணியாலான பொம்மைகள் உள்ளிட்டவற்றையும் கொடுக்கலாம்.
தீவெங்கிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ‘குளூப்’ தானியங்கி இயந்திரங்களில் இவற்றைப் போடலாம்.
இட்ஸ் ரெயினிங் ரெயின்கோட்ஸ்
தேவையற்ற, நல்ல நிலையில் உள்ள பொருள்களைச் சேகரித்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது இட்ஸ் ரெயினிங் ரெயின்கோட்ஸ் நிறுவனம்.
குறிப்பாக ஆண்களுக்காக உடைகள், காலணிகள், நீர்ப்புட்டிகள், மூக்குக்கண்ணாடிகள், பைகள் உள்ளிட்டவற்றை அந்நிறுவனம் வரவேற்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், வெந்நீர்க்கலன், ரைஸ் குக்கர்கள், மின்னடுப்புகள், மின்தேக்கி (பவர் பேங்க்) , மடிக்கணினி, மிதிவண்டிகள் எனப் பிற பொருள்களையும் இந்நிறுவனம் நன்கொடையாகப் பெற்று தேவையுள்ளோர்க்கு அளிக்கிறது.
ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்திலோ, பல்வேறு பகுதிகளில் உள்ள அதன் சேகரிப்பு மையங்களிலோ பொருள்களைக் கொடுக்கலாம். குளிர்பதனப்பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட பெரிய பொருள்களை எடுத்துச் செல்லும் வசதியை நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.
யூனிக்ளோ
யூனிக்ளோ கடைகளில் வாங்கிப் பயன்படுத்தப்பட்ட, நல்ல நிலையில் உள்ள உடைகளை அந்நிறுவனம் சேகரித்து மறுபயன்பாடு செய்கிறது.
உடைகளை நன்கொடையாகப் பெற்று, சலவை செய்து, சிறுவர்கள் சங்கம் (Children’s Society), செலராங் இடைநிலை மறுவாழ்வு இல்லம் (Selarang Halfway House) உள்ளிட்ட எட்டுச் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து பயனாளிகளுக்கு மறுவிநியோகம் செய்கிறது.
யூனிக்ளோ கடைகளில் வாங்கிய உடைகளை மட்டும், அக்கடைகளில் உள்ள பச்சை, வெள்ளை நிறப் பெட்டிகளில் அளிக்கலாம்.
ஸாரா
ஆடை நன்கொடைத் திட்டத்தின் மூலம், ஆடைகளை சேகரித்து மறுசுழற்சி செய்து, உள்ளூர் நிறுவனங்களுக்கு மறுவிநியோகம் செய்கிறது ஸாரா (ZARA) நிறுவனம்.
தங்களது கடை என்றில்லாமல், எல்லா வகை துணிகளையும் நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது. மேலும், காலணிகள், நகைகளையும் அது ஏற்றுக்கொள்கிறது.
பொருள்களை அளிக்க விரும்புவோர், அதனை முறையாகப் பெட்டியில் இட்டு, ஒட்டி சாரா கடைகளிலுள்ள துணிச் சேகரிப்புப் பெட்டிகளில் போடலாம்.
டிக்னிட்டி மாமா
படித்து முடித்த தேவையற்ற புத்தகங்களைச் சேகரித்து மறு பயன்பாடு செய்கிறது டிக்னிட்டி மாமா நிறுவனம். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் செயல்படும் இத்திட்டத்தில், நன்கொடையாகப் பெறப்பட்ட புத்தகங்கள், சிறப்புத் தேவையுள்ளோரைப் பணியமர்த்தி, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் விற்கப்படுகின்றன. இது அவர்களுக்கு ஒரு கடையை நடத்தும் திறனை வளர்க்கும் நோக்கில் செயல்படுகிறது.
பயன்படுத்தும் நிலையில் உள்ள குழந்தைகள் நூல்கள், புனைகதை, கணினி அறிவியல் உள்ளிட்ட நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆங்கிலம் அல்லாத வேறு மொழிப் புத்தகங்களும் தேவைக்கேற்ப ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
புத்தகங்கள் தர விரும்புவோர் இங் டெங் ஃபோங் மருத்துவமனை, தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மையங்களிலும், ‘டிக்னிட்டி மாமா’ மையத்திலும் அளிக்கலாம்.
கிரீன் ஸ்குவேர்
சிங்கப்பூரில் உருவாகும் உடைக்கழிவுகளில் ஏழு விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுகிறது ‘கிரீன் ஸ்குவேர்’. பொருள்களை அதன் நிலைக்கேற்ப வகைப்படுத்தி, அவற்றில் சிறந்தவை, வெளிநாடுகளில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருள்கள் விற்கும் கடைகளில் விற்கப்படுகின்றன. மறுவிற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளவை மறுசுழற்சி செய்யப்பட்டு சுத்தம் செய்யும் துணியாக மாற்றி விற்கப்படுகின்றன.
அந்த நிதி அவ்வமைப்பின் பிற சமூகப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஃபூனான் கடைத்தொகுதி, ஃபியூசினோபோலிஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்களில் உடைகளைக் கொண்டு சேர்க்கலாம்.
மைண்ட்ஸ்
அறிவுசார் குறைபாடுள்ளோர்க்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் அமைப்பான மைண்ட்ஸ், (Movement for the Intellectually Disabled of Singapore) அவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை நன்கொடையாகச் சேகரித்து, அவற்றை விற்கும் பயிற்சிகளை அளிக்கிறது.
உடைகள், காலணிகள், அணிகலன்கள், குழந்தைகளுக்கான பொருள்கள், பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், சமையலறைப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களைப் பணியமர்த்தி இவை விற்கப்படுகின்றன.
அதிலிருந்து பெறப்படும் வருமானம் பயிற்சிக்கான மாதாந்தர படித்தொகை, உணவுச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மெட்டா நல்வாழ்வுச் சங்கம்
பல்வேறு வகை ஆடைகளைச் சேகரித்து மறுசுழற்சி செய்யும் நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்கிறது மெட்டா நல்வாழ்வுச் சங்கம். (METTA WELFARE ASSOCIATION)
மின்னணுக் கருவிகள், ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை அவ்வமைப்பின் கட்டடத்தில் அளிக்கலாம்.
எச்&எம்
ஆடைகளைச் சேகரித்து வகைப்படுத்தி, அவற்றை மறுபயனீடு, மறுசுழற்சி செய்யப்படும். நன்கொடைகள் அளிப்போர்க்கு, அக்கடையின் 15 விழுக்காடு தள்ளுபடி பற்றுசீட்டு வழங்கப்படும்.
ஆடைகளை எச்&எம் கடைகளில் மறுசுழற்சிப் பெட்டியில் சேர்க்கலாம்.
பாஸ் இட் ஆன்
இந்த இணையத்தளம் தேவைப்படும் நபர்களையும் பொருள்களையும் இணைக்கிறது.
தன்னார்வ நல அமைப்புகள் அவர்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் பட்டியலைக் கொடுப்பார்கள். அந்தப் பொருள்கள் இருந்தால் அவற்றை வழங்கலாம்.
பட்டியலில் இல்லாத பொருள்களையும் அவற்றின் படங்கள், விளக்கங்களுடன் வழங்கலாம்.
எஸ்ஜி மம்மிஸ் யுனைடெட்
கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எஸ்ஜி மம்மிஸ் யுனைடெட் ஃபேஸ்புக் குழு, சிரமப்படும் தாய்மார்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பால் மாவு, அணையாடை (Diaper), ஆடைகள் உள்ளிட்ட தாய்மார்கள், குழந்தைகளுக்குத் தேவைப்படும் பொருள்களை அளிக்க விரும்புவோர் அந்த ஃபேஸ்புக் குழுவைத் தொடர்புகொள்ளலாம்.
இரட்சண்ய சேனை
உடைகள், பைகள், காலணிகள், பொம்மைகள், புத்தகங்கள், மின்னணுக் கருவிகள், சமையலறைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை இரட்சண்ய சேனையிடம் (சால்வேஷன் ஆர்மி) நன்கொடையாக அளிக்கலாம்.
பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள பொருள்கள் சேகரிக்கப்பட்டு, இரட்சண்ய சேனையின் ஐந்து கடைகளில் (ஃபேமிலி ஸ்டோர்) விற்கப்படும். அதன்மூலம் திரட்டப்படும் நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.