குறைந்த வருமான ஊழியர்கள் மற்றும் இணையத்தள ஊழியர்கள் உட்பட எல்லா ஊழியர்களின் நலன்களையும் சிறந்த முறையில் பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் உறுதிப்பாட்டை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தமது மே தினச் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.
“நீடித்து நிலைக்கக்கூடிய வழியில் ஊழியர்களின் தரத்தை மேம்படுத்த வேலைநலன், படிப்படியாக உயரும் சம்பள முறை போன்றவற்றின் மூலம் உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஊழியர்நலன் முன்னேற்றம் பிரதிபலிக்கிறது.
“அத்துடன், தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளும் அதற்குக் கைகொடுகின்றன,” என்றும் டாக்டர் டான் தெரிவித்து உள்ளார்.
உலகிலேயே இணையத்தள ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய முதல் நாடுகளில் சிங்கப்பூர் இடம்பெற்று உள்ளது என்பதையும் அவர் தமது மேதினச் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.
“இணையத்தள ஊழியர்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்கீழ் டாக்சி ஓட்டுநர்கள், வாடகை கார் ஓட்டுநர்கள், தன்விருப்ப விநியோக ஊழியர்கள் ஆகியோருக்கு சிறந்த முறையில் சட்ட ரீதியிலான பாதுகாப்பு வழங்கப்படுகிறது,” என்றார் அவர்.
வேலையிட மரண விகிதம் பற்றிக் குறிப்பிட்ட டாக்டர் டான், கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 1.1 என்ற சராசரி நிலையில் நீடிப்பதாகவும் சிறப்பான முறையில் அந்த விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், கடந்த ஆண்டு வேலையிடங்களில் காயமடைந்தோர் விகிதம் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்திருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலம் காலமாக அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதற்காக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு ஆகிய முத்தரப்புப் பங்காளிகளுக்கு டாக்டர் டான் நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மூத்தோர் வேலைவாய்ப்புக்கான புதிய முத்தரப்பு வேலைக் குழு, என்டியுசி நிறுவனப் பயிற்சிக் குழு மானியம் போன்றவற்றின் கடப்பாடுகளையும் அவர் எடுத்துக்காட்டி உள்ளார்.
அத்துடன், பாகுபாட்டு முறைக்கு எதிரான நமது நிலைப்பாட்டை மறுஉறுதிப்படுத்தும் வகையில் இவ்வாண்டின் தொடக்கப் பகுதியில் வேலையிட நியாயச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டதையும் அமைச்சர் தமது மே தினச் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

