அலியான்ஸ் - இன்கம் நிறுவன ஒப்பந்த நிறுத்தம் குறித்து நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது பாட்டாளிக் கட்சி வாக்களிக்காமல் இருந்ததைப் பற்றி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) பிரசாரக் கூட்டத்தில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் குறிப்பிட்டிருந்தார்.
பாட்டாளிக் கட்சியின் ஈடுபாடு, அந்த ஒப்பந்தத்தைத் தடுக்க அனுமதித்திருக்கும் என்று கூறிய திரு லீயின் கருத்துக்கு பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) பதிலளித்தார்.
“நாங்கள் அரசாங்கம் அல்ல. நாங்கள் இதற்குப் பொறுப்பானவர்கள் போல மூத்த அமைச்சர் சித்திரித்துள்ளார்,” என்று செய்தியாளர்களிடம் திரு சிங் கூறினார்.
நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள், பாட்டாளிக் கட்சி உறுப்பினர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று ஒப்பிடும்போது, ஆறு பேருக்கு ஒருவர் என்றுகூட இல்லாமல், ஒன்பது பேருக்கு ஒருவர் எனும் விகிதம் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அப்படியே பாட்டாளிக் கட்சியின் எல்லா உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இருந்தாலும்கூட இந்த விகிதம் மாறாது,” என்றார் திரு சிங்.
எதிர்க்கட்சிகளுக்குச் சற்று அதிக வாக்குகளை வழங்குவதற்காக, வாக்காளர்கள் மசெகவுக்கு எதிராக வாக்களிக்கக்கூடாது என்றும் மூத்த அமைச்சர் லீ கேட்டுக்கொண்டிருந்தார்.
குறிப்பாக, துணைப் பிரதமர் கான் கிம் யோங் போன்ற முக்கிய அமைச்சர்களை இழந்தால் நாளடைவில் அதற்குக் கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம் என்று தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
இதை ஒரு வலுவற்ற வாதம் என்று தாம் நினைப்பதாகக் கூறிய திரு சிங், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோவை அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் மசெக அணிக்குத் தலைமை தாங்கினார் திரு இயோ. அத்தொகுதியில் மசெக அணி 45.3% வாக்குகளைப் மட்டும் பெற்று, பாட்டாளிக் கட்சியிடம் தோற்றுப்போனது.
“திரு இயோ வெற்றிபெறாவிட்டாலும் நமது வெளியுறவு அமைச்சு தனது பொறுப்பை இழக்கவில்லை. அவர் பல பொறுப்புகளை வகித்துள்ளார். அவருடைய செல்வாக்கு இன்றுவரை பேசப்படுகிறது,” என்றார் திரு சிங்.
மேலும், “திரு கான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் சில முக்கியமான அரசாங்க அமர்வுகளில் அவரை இடம்பெறச் செய்வதில் மசெகவுக்கு எந்தச் சிரமமும் இருக்காது என்று நான் நம்புகிறேன்,” என்றும் திரு சிங் கூறினார்.

