தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தடையற்ற வர்த்தகம், முதலீடுகள் மூலம் உலகளாவிய வறுமையைப் போக்கலாம்’

2 mins read
ஜி20 உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங்
d59daaec-bdea-4329-8abc-73ff1e7712aa
ஜி20 உச்சநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், மோதல்களையும் போர்களையும் தவிர்ப்பதே பசியையும் வறுமையையும் சமாளிப்பதற்கான நேரடி வழி என்று கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலக நாடுகள் தடையற்ற வர்த்தகம், முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் பொருளியல் வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு,வறுமையை எதிர்த்துப் போரிடலாம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

வளர்ச்சியும் வர்த்தகமும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஆகச் சிறந்த வழி என்று நவம்பர் 18ஆம் தேதி நடந்த ஜி20 நாடுகளின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டார்.

வறுமை, பசி ஆகியவை தொடர்பான அந்தக் கலந்துரையாடல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 உச்சநிலை மாநாட்டில் இடம்பெற்றது.

“வேலைவாய்ப்புகள் வறுமையைக் குறைப்பதற்கான நேரடி வழி,” என்றார் திரு வோங். வேலைவாய்ப்பு என்பது தகுதி, நிலைத்தன்மை, தற்சார்பு ஆகியவற்றை வழங்குவதை அவர் சுட்டினார்.

இந்தக் காரணங்களால் உலக வர்த்தக நிறுவனத்தை மறுசீரமைப்பதும் வலுப்படுத்துவதும் முக்கியமாகிறது என்று பிரதமர் கூறினார்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வா, ஜி20 உச்சநிலை மாநாட்டின் முதல் நாளில் வறுமை, பசிக்கு எதிரான உலகளாவிய கூட்டணியைத் தொடங்கி வைத்தார்.

சிங்கப்பூர் உட்பட 80க்கும் மேற்பட்ட நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பிரதமர் வோங் தமது உரையில், பசியையும் வறுமையையும் சமாளிப்பதற்கான நேரடி வழி, மோதல்களையும் போர்களையும் தவிர்ப்பதும் தேவைகள் அதிகமுள்ள, மோதல்களால் பாதிக்கப்பட்ட வட்டாரங்களுக்கு உதவி வழங்குவதுமே என்று குறிப்பிட்டார்.

சாத்தியமான இடங்களில் சிங்கப்பூர் அதன் பங்கை ஆற்றிவருவதாகக் கூறிய அவர், காஸா மக்களுக்கு மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.

வர்த்தகம், பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றால் நன்மைகள் விளைந்தாலும் வளர்ச்சியும் வேலைவாய்ப்பு உருவாக்கமும் மட்டுமே போதாது என்று கூறிய திரு வோங், “புதிய வேலைவாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்கள் திறன்பெற்றவர்களாக இருக்கவேண்டும். அதனால் அரசாங்கங்கள் மனிதவளத்தில் தொடர்ந்து முதலீடு செய்யவேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

கல்வியும் பள்ளிகளும் இதைச் செய்தாலும் அரசாங்கங்கள் இதன் தொடர்பில் செயலாற்ற வேண்டியது அதிகமிருப்பதாக அவர் கூறினார். தொழில்நுட்பக் கல்வி, வேலைவாய்ப்புக் கல்வி, ஊழியர் திறன் பயிற்சி போன்றவற்றை அவர் சுட்டினார்.

புதிய தொழில்துறைகளுக்கான பயிற்சிகளை மக்களுக்கு வழங்கவும் புதிய வேலைகள் உருவாகும்போது உரிய திறனுடையோரை இணைக்கவும் வாழ்நாள் திறன் பயிற்சி, மேம்பாடு ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பின் தேவையைப் பிரதமர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் இந்த அணுகுமுறையால்தான் நீண்டகாலமாக இங்கு வேலையின்மை விகிதத்தை மூன்று விழுக்காட்டுக்குக்கீழ் வைத்திருக்க முடிகிறது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்