மோசடியில் சிக்கும் சிலரைத் தடுப்பது கடினமான பணி: அதிகாரிகள் விளக்கம்

2 mins read
3bd1bb87-5d03-4643-97f7-f12da0ed49f8
(இடமிருந்து) மோசடிக்கு எதிராகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகள் கென்னத் லிம், திமத்தி இங், ஓசிபிசி வங்கியின் உதயகுமார் செல்லப்பன் செல்வராஜு, டிபிஎஸ் வங்கியின் பெக் சுன் ஹுவா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மோசடியில் சிக்கி ஏமாறுவோரில் சிலர் தாங்களாகவே மோசடி வலையில் சிக்குவதாக அதிகாரிகள் கூறினர்.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு சம்பவத்தை, மோசடிக்கு எதிராகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகளும் வங்கி அதிகாரிகளும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் விவரித்தனர்.

முப்பதுகளில் இருந்த பெண் ஒருவர் தமது இரு ஓசிபிசி வங்கிக் கணக்குகளில் இருந்த $130,000 பணம் $600க்குச் சரிந்தது எவ்வாறு என்று அவர்கள் விளக்கினர்.

அனைத்துலக வங்கிக் கணக்கு ஒன்றுக்கு $200,000 அனுப்ப அந்தப் பெண் விரும்பினார்.

அவர் மோசடியில் சிக்கியிருப்பதாகச் சந்தேகம் எழுந்ததால் ஓசிபிசி வங்கியின் ஐந்து அதிகாரிகளும் காவல்துறையின் மோசடி எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகளும் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டனர்.

தொடர்ந்து மூன்று நாள்களாக குறைந்தபட்சம் ஐந்து முறை அந்தப் பெண்ணிடம் அவர்கள் பேசினர். ஒவ்வோர் அழைப்பும் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தன.

‘நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்’ என்று அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவற்றை அவர் செவிமடுக்கவில்லை. நண்பர் ஒருவரின் கடனை அடைக்கத் தாம் பணம் அனுப்புவதாக அந்தப் பெண் சொன்னார்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, பணம் அனுப்புவதில் இருக்கும் ஆபத்துகள் பற்றி தாம் அறிந்திருப்பதாக ஓசிபிசி வங்கயின் இழப்பீட்டு பத்திரத்திலும் அவர் கையெழுத்திட்டார். அதனால், அவர் மேற்கொண்ட பரிவர்த்தனைகளை வங்கி அனுமதித்தது.

இருப்பினும், தமது தவற்றை உணர்ந்துகொள்ள அவருக்கு அதிக நேரம் ஆகவில்லை.

இரு மாதங்கள் கழித்து, தாம் மோசடி செய்யப்பட்டதாகவும் தமது பணம் கரைந்து $600க்கு வந்துவிட்டதாகவும் இரு வங்கிக் கணக்குகளில் ஒன்றில் $17 மட்டுமே உள்ளதாகவும் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

அந்த வங்கியின் இரு கணக்குகளில் இருந்து $130,000 பணத்தை மோசடிக்காரர்களுக்கு அனுப்பியதோடு அவர் நிற்கவில்லை. $330,000 கடன் பெற்று இதர வங்கிகளின் கணக்குகளில் இருந்த பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டார்.

மோசடிகளில் சிக்கியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தபோதிலும் சிலர் அப்படி எல்லாம் இல்லை என்று பிடிவாதம் பிடிக்கும்போது மோசடிகளைத் தடுப்பது எவ்வளவு கடினம் என்பதை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

மோசடிக்கு எதிராகச் செயல்படும் ஓசிபிசி வங்கியின் உதயகுமார் செல்லப்பன் செல்வராஜு, டிபிஎஸ் வங்கியின் பெக் சுன் ஹுவா, காவல்துறை அதிகாரிகள் கென்னத் லிம் திமத்தி இங் ஆகியோர் அந்த அதிகாரிகள்.

மோசடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் இம்மாதம் 11ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகளின் விளக்கம் வெளிவந்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்