புதிதாக அறிவிக்கப்பட்ட செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி கை நழுவிப் போனாலும் தம்மால் முடிந்ததைச் செய்ததாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் தெரிவித்தார்.
“தேர்தலில் ஓர் ஆறுதல் இருக்குமென்றால், எங்களால் முடிந்த அளவு ஆகச் சிறந்த பிரசாரத்தை முன்னெடுத்தோம்,” என்று செய்தியாளர்களிடம் திரு சீ கூறினார்.
மக்கள் செயல் கட்சிக்கு எதிராக செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் களமிறங்கிய திரு சீ, 46.81% வாக்குகளைப் பெற்றார். மக்கள் செயல் கட்சியின் திருவாட்டி போ லீ சான் 53.19% வாக்குகளைப் பெற்றார்.
டாக்டர் சீ, அடுத்து தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராவார் என்று எதிர்பார்ப்பதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் பால் தம்பையா கூறினார்.
2020 பொதுத் தேர்தலில் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் திரு முரளி பிள்ளையை எதிர்த்து போட்டியிட்ட டாக்டர் சீ, 45.20% வாக்குகளைப் பெற்றார்.
டாக்டர் சீ வெற்றியை நெருங்குகிறார் என்று எதிர்பார்த்து கல்வியமைச்சின் இவான்ஸ் விளையாட்டரங்கில் கூடியிருந்த ஆதரவாளர்களுக்கு இறுதி முடிவுகள் ஏமாற்றத்தை அளித்தது.
பொருள், சேவை வரியைக் குறைப்பது, மலிவான விலைகளில் வீடுகள், குடிநுழைவு போன்றவை தொடர்பிலான கொள்கைகளைப் பிரசாரத்தின்போது டாக்டர் சீ முன்வைத்தார்.
தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வின்படி புதிய செம்பவாங் வெஸ்ட் குழுத்தொகுதி 24,153 வாக்காளர்களைக் கொண்டிருந்தது.