ஜூ சியட்டில் 2024ல் நடந்த விபத்தில் பதின்ம வயது மகளைப் பறிகொடுத்த தாயார், அச்சம்பவத்தில் தவறு ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை என்று மரண விசாரணை அதிகாரி கூறியதைக் கேட்டு நிம்மதி அடைவதாகக் கூறியுள்ளார்.
மரண விசாரணை அதிகாரி ஆடம் நக்கோடாவின் அறிக்கை ஜனவரி 27ஆம் தேதி வெளியானது.
2024 ஜூன் 8ஆம் தேதி, ஆய்வுக்கூடத் தொழில்நுட்பரான 24 வயது வூ ஜீ யு ஓட்டிய வேன் மோதியதில் 19 வயது டோரத்தி நவோமி டான் காயமடைந்தார். சம்பவத்திற்கு மறுநாள் அவர் மாண்டார்.
விபத்து தொடர்பில் வேன் ஓட்டுநர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று நம்புவதாக மாண்ட இளையரின் தாயார் டான் சின் ஷின் கூறினார்.
“அது விபத்து என்று நம்புகிறேன். டோரத்திக்கு அவ்வாறு நடக்கும் என்று நினைக்கவில்லை. வேன் ஓட்டுநரும் விபத்து நடக்க வேண்டும் என்று நினைக்கவில்லை,” என்று கூறிய அவர், “ஒருவர் தன் உயிரைக் கொடுத்ததே போதும் என்று நினைக்கிறேன். ஓட்டுநரும் துன்பப்பட்டு அவரது வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்வதை நான் விரும்பவில்லை. நாங்கள் பழிவாங்க நினைக்கவில்லை,” என்றார்.
விபத்தைக் காட்டும் காணொளியில் இளையர் டான், ‘ரைசிங் கோர்ட்’ குடியிருப்புக் கட்டடத்துக்கு அருகிலுள்ள இருவழிச் சாலைக்கு அருகில் உள்ள நடைபாதையில் நிற்பது தெரிகிறது. திரு வூ வேனை ஓட்டிச்சென்ற திசைக்கு எதிர்த்திசையைப் பார்த்தவாறு அவர் நிற்பது அதில் பதிவாகியுள்ளது.
முந்தைய விசாரணையில், இளையர் டான் தனக்கு அருகில் உள்ள சாலைத்தடத்தில் வாகனப் போக்குவரத்தைக் கவனிக்கவில்லை என்று போக்குவரத்துக் காவல்துறை விசாரணை அதிகாரி கூறியிருந்தார்.
இளையர் டான் சாலையில் இறங்கியதும் ஓட்டுநர் வேனை வேறு திசைக்கு மாற்றி, நிறுத்த முயன்றார். இருப்பினும் அவரது முயற்சி பலிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
பெய்ஜிங்கிற்குச் சுற்றுலா சென்றிருந்த இளையரின் குடும்பத்தினர் தகவல் அறிந்து சிங்கப்பூர் திரும்பினர். இளையரின் மூளை செயலிழந்ததாகக் கூறப்படவே அவருக்கு உயிர்காப்பு சிகிச்சை நிறுத்தப்பட்டது. பின்னர், ஜூன் 9ஆம் தேதி பிற்பகல் 1.40 மணியளவில் டோரத்தி டான் உயிரிழந்தார்.
அவர், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியைத் தொடங்கவிருந்ததாகக் கூறப்பட்டது.
பாதசாரிகள் கவனத்துடன் சாலையைக் கடக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இவ்விபத்து உணர்த்துவதாக மரண விசாரணை அதிகாரி நக்கோடா குறிப்பிட்டார்.

