‘நாம் முதலில் சமூகத்துக்கே முன்னுரிமை’ (‘We First’ society) என்ற சமூக கட்டமைப்பை வடிவமைப்பதற்கு அரசாங்கம் அதற்கான முதல் அடியை எடுத்து வைக்கும். ஆனால், தனிப்பட்டோரின் முயற்சிகள் மட்டுமே அதனை நடைமுறைப்படுத்தமுடியும் என்று கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ கூறியுள்ளார்.
சிங்கப்பூர் கண்ணோட்டங்கள் 2026 (Singapore Perspectives 2026) என்ற தலைப்பில் பொதுக் கொள்கை ஆய்வுக் கழகம் திங்கட்கிழமை (ஜனவரி 26) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கல்விக்கான மூத்த துணை அமைச்சருமான டேவிட் நியோ தமது சிறப்புரையில் அக்கருத்தைத் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் மாநாட்டுக்கான இவ்வாண்டின் கருப்பொருள் ‘சகோதரத்துவம்’ என்பதாகும். அதன்படி, சிங்கப்பூர் சமூகத்தின் ஒருங்கிணைப்பு குறித்து மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டது.
அமைச்சர் டேவிட் நியோ, சிங்கப்பூரின் அடையாளத்தை வலுப்படுத்தும் எண்ணத்துடன் கேள்விகளை வடிவமைத்த குழுவில் அங்கம் வகித்தார். தனிப்பட்ட வெற்றிகளைக் கடந்து சமூகமாகச் செயல்படும் மனநிலையை வளர்ப்பது குறித்து கேள்விகள் அமைந்தன.
‘நாம் முதலில் சமூகம்’ என்பது ஆழமான இலக்குகளை உள்ளடக்கியது என்றதுடன் அதனை எவ்வாறு அடைவது என்பதைப் பற்றியும் அமைச்சர் விளக்கினார்.
கடந்த 60 ஆண்டுகளாக சிறந்த அரசாங்கம், நல்லாட்சி, வளர்ச்சி ஆகியவை சிங்கப்பூரின் வரலாற்றில் அடிப்படை அங்கமாக விளங்கிவந்துள்ளன என்று அவர் சுட்டினார்.
மிக ஆழமான செயல்பாடுகளை ‘நாம் முதலில் சமூகம்’ உள்ளடக்கியது என்பதால் அந்தக் கொள்கையை அடைவது மிகவும் கடினமான ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
மாற்றத்துக்கான வழிவகைகளை அரசாங்கம் முதலில் ஏற்படுத்தினாலும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் செயல்படும்போதுதான் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கான மூன்று திட்டங்களை அவர் குறிப்பிட்டார். மக்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துதல், குடிமக்களும் அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து சமூகத்தையும் நாட்டையும் கட்டமைத்தல், ‘நாம் முதல் சமூகத்துக்கே முன்னுரிமை’ என்பதை வாழ்க்கை முறையாக்குதல் ஆகியன அந்த மூன்று வழிகளாகும்.
மாறிவரும் இந்த உலகில் நாம் தொடர்ந்து தனிச்சிறப்புடன் திகழ வேண்டுமானால், ‘நாம் முதலில்’ சமூகத்தை வளர்த்தெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

