மக்கள் செயல் கட்சிதான் (மசெக) சரியான தேர்வு என்பதையும் மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கும் கட்சி அது என்பதையும் எல்லா வாக்காளர்களிடத்திலும் அந்தக் கட்சி எடுத்துச் சொல்லவேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
அது கட்சியின் கிளைத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் பொறுப்பு மட்டுமல்ல ஒவ்வொரு தொண்டரின் கடமையாகும் என்றார் அவர்.
“கட்சியின் அடித்தளத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள்.
“வாக்காளர்களோடு பிணைப்பை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இதயத்திலும் எண்ணத்திலும் இடம்பிடிப்பதோடு அவர்களின் வாக்குகளையும் பெற வேண்டும்,” என்று மசெக மாநாட்டில் உரையாற்றியபோது திரு லீ குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரர்கள் அளிக்கும் வாக்கு அவரவர் தொகுதியின் எம்.பி.யைத் தேர்ந்து எடுப்பதற்கானது மட்டுமல்ல; எந்தக் கட்சி சிங்கப்பூரை ஆளவேண்டும் என்பதற்கானதும்கூட.
“அடுத்த பொதுத் தேர்தலை ஓர் இடைத்தேர்தலாகக் கருதிவிடக்கூடாது என்பதை வாக்காளர்ளுக்கு உணர்த்த மசெக கடுமையாகப் பாடுபட வேண்டும்.
“எந்தக் கட்சி தங்களது வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை, எதிர்காலத்தைச் சிறப்பான முறையில் பாதுகாக்கிறது என்பதைத் தெளிவாகச் சிந்தித்து மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டியது சிங்கப்பூரர்களின் கடமை,” என்றார் அவர்.