தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) அறிக்கைக்குப் பதிலடி தரும் விதமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
பிஎஸ்பி கட்சியின் பொதுச் செயலாளர் லியோங் மன் வாய், “வீடமைப்பு பிரச்சினைகள் குறித்து மக்கள் செயல் கட்சி தேர்தல் பிரசாரங்களில் மெளனம் காக்கிறது,” என்று புதன்கிழமை (ஏப்ரல் 30) காலை கூறினார்.
“வீடமைப்பு பிரச்சினைகள் குறித்து பிரசாரம் மற்றும் தொகுதி உலாக்களில் பலமுறை பேசியுள்ளோம்,” என்று திரு டெஸ்மண்ட லீ, தெரிவித்தார்.
மேலும் கொவிட்-19 காரணமாகக் கட்டடப் பணிகள் தாமதமானதைப் பொதுமக்களிடம் விவரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“தற்போது கட்டுமானப் பிரச்சினைகள் இல்லை, சொத்துச் சந்தையும் நிலையாகி வருகிறது, கட்டுப்படியான விலையில் வீடுகளை விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததால்தான் இது சாத்தியமானது,” என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
பிஎஸ்பி கட்சி சிங்கப்பூரில் வீடுகளின் விலை அதிகமாக இருப்பதாகத் தமது பிரசாரத்தில் குறிப்பிட்டு வருகிறது.
வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் அமைச்சர் டெஸ்மண்ட் லீ தலைமையில் மக்கள் செயல் கட்சி (மசெக) குழு போட்டியிடுகிறது.
அங்கு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மசெகவை எதிர்த்துப் போட்டியிடுகிறது. அந்தக் குழுவை டாக்டர் டான் செங் போக் வழி நடத்துகிறார்.

