தீவிரவாதம் பக்கம் இளையர்கள் ஈர்க்கப்படுவதைச் சமூகமாகச் சேர்ந்து தடுக்கவேண்டும்: நிபுணர்கள்

தீவிரவாதம் பக்கம் இளையர்கள் ஈர்க்கப்படுவதைச் சமூகமாகச் சேர்ந்து தடுக்கவேண்டும்: நிபுணர்கள்

3 mins read
42c7fc85-951e-4eba-81cb-8cb91b648b7f
இணையத்தளங்களில் கண்ட காணொளிகள், படங்கள் மூலம் தீவிரவாத எண்ணங்கள் சிங்கப்பூரில் எட்டு பேருக்கு ஏற்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையத்தில் உள்ள பல்வேறு தளங்கள் தீவிரவாதச் சித்தாந்தங்களின் பக்கம் இளையர்களை ஈர்க்கக்கூடியவையாக இருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நிபுணர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டோருக்கு நேரடியாக ஆலோசனை வழங்கும் நிபுணர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சக நண்பர்கள் ஆகியோருடன் வெவ்வேறு இணையத்தளங்களும் இளையர்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

தீவிரவாத எண்ணங்களுக்காக சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளில் தடுத்து வைக்கப்பட்ட இளையர்களிடம் அத்தகைய எண்ணங்கள் உருவாக சமூக ஊடகங்களும் இணைய விளையாட்டுகளும் காரணங்கள் என்பது தெரியவந்துள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை எட்டு சிங்கப்பூரர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இணையத்தளங்களில் கண்ட காணொளிகள், படங்கள் மூலம் தீவிரவாத எண்ணங்கள் அவர்களிடம் உருவானதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டது.

“வன்முறையான இணைய விளையாட்டுகள் அத்தகைய நடத்தை ஏற்புடையது என்ற சமிக்ஞையைத் தருகின்றன. குறிப்பாக, சுய அடையாளத்தைத் தேடிக்கொண்டிருக்கும் இளையர்களுக்கு வன்முறையாக நடந்துகொள்வது பரவாயில்லை என்ற எண்ணத்தை அது தருகிறது,” என்றார் தீவிரவாத எண்ணம் கொண்டதால் தடுத்துவைக்கப்பட்ட இளையர்களுக்கு ஆலோசனை வழங்கும் டாக்டர் முகமது முபாரக் ஹபீப் முகமது.

இவ்வாண்டு ஜனவரியில் 14 வயது இளையர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுக்கு ஆதரவான பதிவை இணையத்தில் பதிவிட்டார். அதில் ரோப்லொக்ஸ் (Roblox), கோர்போக்ஸ் (Gorebox) ஆகிய இணைய விளையாட்டுகளின் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

உயர்நிலை மூன்றில் பயிலும் மாணவர் வெளிநாட்டுக்குச் சென்று பயங்கரவாதக் குழுவுக்காகப் போராடி உயிரிழக்க விருப்பம் கொண்டிருந்தார்.

ஜனவரி மாதத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை அடுத்து ரோப்லோக்ஸ் போன்ற தளங்கள் இளையப் பயனீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கின்றனவா என்று விவாதிக்கிறது.

தீவிரவாதம் பக்கம் சிங்கப்பூர் இளையரை ஈர்த்த யூடியூப்

சிங்கப்பூரில் சமய அடையாளத்தைத் தேடிக்கொண்டிருந்த 18 வயது காலிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இயல்பாக யூடியூப் பக்கம் திரும்பினார். அங்கு, கவர்ச்சியாகப் போதனை செய்யக்கூடிய அடிப்படைவாதிகளான அன்வார் அல் அவ்லாகி, ஃபேயிஸ் முகமது போன்றோரின் காணொளிகள் காலிட்டின் கண்களில் பட்டன.

பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர். சொந்த மடிக்கணினி. அளவற்ற இணைய வசதி. இணையத்தளத்தில் ஜீஹாத் சித்தாந்தத்தை அளவில்லாமல் உள்வாங்க ஆரம்பித்தார் காலிட்.

ஒரு கட்டத்தில் அல்-கொய்டா அமைப்புடன் தொடர்புடைய அல் அவ்லாகியை நேரடியாகத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு காலிட்டிற்குக் கிடைத்தது.

2008, 2009ஆம் ஆண்டுகளில் நடந்த காஸா போரால் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களைத் தற்காக்க சக முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தவேண்டும் என்ற எண்ணம் தமக்குள் படிப்படியாக வேரூன்ற தொடங்கியதைக் காலிட் நினைவுகூர்ந்தார்.

திடீரென ஒரு நாள், அல்-கொய்டாவிற்கு ஆட்சேர்க்கும் நபர் ஒருவர் காலிட்டை யூடியூப் தளம் மூலம் தொடர்புகொண்டு ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்ய உதவுவதாக உறுதியளித்தார்.

“இணையத்தளத்தில் உள்ள கிளர்ச்சியாளர்களின் காணொளிகளுக்கு விருப்பக் குறி இட்டதுடன் ஆதரவாகக் கருத்துகளையும் தெரிவித்திருந்தேன். அதன் மூலம் அந்த ஆடவர் என்னைக் கண்டுபிடித்தார் என்று நம்புகிறேன்,” என்றார் தற்போது 30களில் இருக்கும் காலிட்.

2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாசிர் லபா முகாமில் ராணுவத் தலைவருக்கான பயிற்சியை மேற்கொண்டபோது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் காலிட் கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்