சமநிலையான நாடாளுமன்றம் அமைய பாட்டாளிக் கட்சியை ஆதரிப்பீர்: பிரித்தம் சிங்

2 mins read
26481952-e6a3-4a47-9c60-e768cafbb855
மக்கள் குரல் கேட்கப்படும் ஒரு சமநிலையான நாடாளுமன்றம் அமைய சிங்கப்பூருக்கு உதவுமாறு பாட்டாளிக் கட்சி தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தம் கேட்டுக்கொண்டுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

மக்களின் குரல் கேட்கப்படும் ஒரு சமநிலையான நாடாளுமன்றம் அமைய, சிங்கப்பூருக்கு உதவுமாறு பாட்டாளிக் கட்சி தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தம் ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) இரவு பாட்டாளிக் கட்சியின் மூன்றாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திரு அவர், பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வை மீண்டும் விமர்சித்தார்.

“உலகளாவிய பணவீக்கத்திற்கு மத்தியில் ஏன் ஜிஎஸ்டி உயர்ந்தது? அதை ஏன் அரசாங்கம் தள்ளிப்போடவில்லை?” என்று திரு பிரித்தம் சிங் வினவினார்.

அரசாங்கத்தால் திரட்டப்பட்ட உபரிகள், ஜிஎஸ்டி உயர்வைத் தாமதப்படுத்தியிருக்க முடியும் என்று அவர் வாதிட்டார்.

“அரசாங்க நிதியிருப்பில் எவ்வளவு மிஞ்சியுள்ளது என்பதைக் கேட்க சிங்கப்பூரர்கள் ஒருபோதும் தயங்கக்கூடாது,” என்றார் அவர்.

மேலும், மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) ஒரு செய்தி அனுப்ப, பாட்டாளிக் கட்சிக்கு சிங்கப்பூரர்கள் வாக்களிக்க வேண்டும் என்று திரு பிரித்தம் சிங் கேட்டுக்கொண்டார்.

“பாட்டாளிக் கட்சியிடம் மசெக வாக்குகளை இழக்கும்போது சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்கள் எதிர்க்கும் பிற கொள்கைகளைச் செயல்படுத்துவதற்குமுன், இரண்டு அல்லது மூன்று முறைகூட யோசிக்கும் சூழ்நிலை ஏற்படும்,” என்று திரு பிரித்தம் சிங் உரைத்தார்.

பொங்கோல் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி வேட்பாளர் ஹர்பிரீத் சிங், அத்தொகுதியில் எதிர்க்கட்சி வென்றாலும் பொங்கோல் மின்னிலக்க வட்டார மேம்பாடு போன்ற தேசிய அளவிலான திட்டங்கள் தொடரும் என உறுதியளித்தார் .

வெற்றிபெற்றால் பொங்கோல் நகர மன்றத்தை தமது அணி முடிந்தவரை சிறப்பாக நடத்தும் என்றும் அவர் கூறினார்.

“பொங்கோல் குழுத்தொகுதியை வழிநடத்துவதில் மக்கள் கோரிக்கைகளுக்குச் செவிமடுப்பதும் அவர்களுக்காக நேரம் ஒதுக்குவதும் எங்கள் அணுகுமுறை,” என்றார் திரு ஹர்பிரீத் சிங்.

இத்தேர்தலில் மசெக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

“மக்களாகிய உங்களுக்கு என்றும் ஒரு வலுவான, விசுவாசமான எதிர்க்கட்சி தொடர்ந்து இருக்கும்,” என்று கூறி தமது உரையை அவர் நிறைவுசெய்தார்.

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினம், வீட்டு விலைகள், பெற்றோருக்குக் கூடுதல் உதவி போன்ற கோரிக்கைகளை வேட்பாளர்கள் அப்துல் முகைமின் அப்துல் மாலிக்கும், சித்தி ஆலியா அப்துல் ரஹிம் மாத்தாரும் முன்வைத்தனர்.

‘பொங்கோலில் அந்நியர்கள் தேவையில்லை’ என்று உள்துறைத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் சனிக்கிழமை (ஏப்ரல் 26) பிரசாரக் கூட்டத்தில் கூறியதற்குப் பாட்டாளிக் கட்சியின் அலெக்ஸிஸ் டாங் பதிலடித் தந்தார்.

“மக்களாகிய உங்களுக்குச் சேவையாற்ற எங்களுக்குத் தேவையான வாக்குகள் 61,780,” என்றார் பொங்கோல் குழுத்தொகுதி வேட்பாளர் ஜேக்சன் ஆவ்.

குறிப்புச் சொற்கள்