தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பின்தங்கியிருப்போரை நாம் மறந்துவிடக்கூடாது: டாக்டர் ஜனில்

3 mins read
91d6f9f8-f40b-48d8-a054-2bb74d27389f
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி. - படம்: த.கவி
multi-img1 of 3

கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியச் சமூகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டிருந்தாலும் இன்னும் சவால்களைச் சந்தித்துவரும் மக்களுக்கு குறிப்பிட்ட ஆதரவு வழங்குவது அவசியம் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய தினப் பேரணி உரைக்குப் பிந்தைய கலந்துரையாடலில் பேசிய டாக்டர் ஜனில், இந்தியச் சமூகம் நாட்டுடன் இணைந்து வளர்ந்து, சராசரியாக சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஆனால், “சில தனிமனிதர்கள், குடும்பங்கள் இன்னும் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்பதை நாம் மறக்கக்கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.

“அந்தச் சவால்களைச் சமாளிக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நமது தொகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வழிகாட்டி, ஆதரித்து, கைகொடுப்பது முக்கியம்.

“நமது இளையர்களையும் பல்வேறு அமைப்புகளையும் ஒன்றிணைத்தால் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவு வழங்க நமது முயற்சிகளை ஒன்றுதிரட்ட முடியும்,” என்று டாக்டர் ஜனில் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களின் அடித்தளத் தலைவர்கள், தொண்டூழியர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் என ஏறத்தாழ 200 பேர் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஏறத்தாழ 200 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஏறத்தாழ 200 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். - படம்: த.கவி

இதுபோன்ற நிகழ்ச்சிகள் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மதிப்பீடு செய்து, முன்னோக்கி திட்டமிட உதவுவதாக டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு முறையும், புதிய உறுப்பினர்களைக் கொண்டுவாருங்கள். அவர்கள் கேள்விகளை எழுப்பவும், கருத்துகளை உங்கள் அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இப்படித்தான் நமது கட்டமைப்பு மேலும் வலுப்பெறும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இக்கலந்துரையாடலில் இவ்வாண்டு செயற்கை நுண்ணறிவு, வேலைவாய்ப்பு சவால்கள், சமூக ஒருங்கிணைப்பு, சுகாதாரம், இருமொழிக் கல்வி, முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டன.

டாக்டர் ஜனிலுடன் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுல் பேசிய  (இடமிருந்து) டாக்டர் ஹமீது ரசாக், டாக்டர் ஜனில் புதுச்சேரி, திரு விக்ரம் நாயர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றுல் பேசிய (இடமிருந்து) டாக்டர் ஹமீது ரசாக், டாக்டர் ஜனில் புதுச்சேரி, திரு விக்ரம் நாயர். - படம்: த.கவி

இந்திய அமைப்புகளின் மக்களைச் சென்றடையும் முயற்சிகளை (outreach efforts) எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. எந்தவோர் அமைப்பும் தனியாகச் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது என்பதால், பங்காளித்துவங்களை உருவாக்குவதும் கூட்டுமுயற்சியில் ஈடுபடுவதும் அவசியம் என்று கூறப்பட்டது.

மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள நேரம் செலவிடுதல், வீட்டிற்கே சென்று அழைப்பது (door-knocking) போன்ற நடவடிக்கைகள் நம்பிக்கையை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள அணுகுமுறைகளாகக் குறிப்பிடப்பட்டன.

தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, உயர்கல்வி மாணவர்கள் என அனைவருக்கும் தகுந்தவாறு செயற்கை நுண்ணறிவை அனைத்து நிலைகளிலும் எளிதில் அணுகக்கூடியதாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் வழங்குவது குறித்துப் பேசப்பட்டது.

தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தியின் தொடர்பாக, கணினி அறிவியல் படிப்புக்கான சேர்க்கையை உயர்த்துதல், பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியை அறிமுகப்படுத்துதல், ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ வாயிலாக பணியிடைக்கால பயிற்சிகளை வழங்குதல் ஆகியவை உத்திகளாகக் கலந்துரையாடப்பட்டன.

தொழில்நுட்ப மாற்றங்களைச் சமாளிக்க, மீள்திறனும் தகவமைப்புத் திறனும் அவசியம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

தாய்மொழிக் கல்வி, இருமொழித்திறன் பற்றியும் கலந்துரையாடலில் பேசப்பட்டது. இதனை ஊக்குவிப்பதில் சமூகம் மேலும் அதிகமாக ஈடுபட வேண்டும் என்றும் மேம்பட்ட செயல்திறனுக்காக தற்போதைய வளங்களையும் பாடத்திட்டங்களையும் மதிப்பாய்வு செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

தமிழ்மொழியின் உயிராற்றலைக் கட்டிக்காப்பதன் முக்கியத்துவமும் தேச ஒருமைப்பாட்டில் மொழியின் பங்களிப்பும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டன.

- படம்: த.கவி

கலந்துரையாடலுக்குப்பின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு விக்ரமும் டாக்டர் ஹமீதும் தமிழ் முரசிடம் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.

ஆலோசகராக முதன்முறையாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் ஹமீது, அடித்தளத் தலைவர்கள் உண்மையான அக்கறையுடன் கேள்விகளை எழுப்பியதாக கூறினார்.

“சவால்களைத் தனிப்பட்ட முறையில் அல்லாது, ஒரு சமூகமாக ‘நாம்’ என்ற மனப்பான்மையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற பிரதமரின் கூற்றை இன்றைய கலந்துரையாடல் பிரதிபலித்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்தியச் சமூகத் தலைவர்கள் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றனர். அவர்கள் கொள்கைகளை அடித்தளத்திற்குக் கொண்டுசேர்க்கும் முக்கியப் பணியைச் செய்கின்றனர்,” என்றார் திரு விக்ரம்.

மேலும், பிரதமர் அறிவித்துள்ள மின்சிகரெட் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள், புதிய வட்டார மேம்பாடுகள், வடக்குப் பகுதியில் மலேசியாவுடனான இணைப்பு ஆகியவை, இந்தியர்கள் உட்பட அனைத்துச் சமூகங்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமையும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்