பதினெட்டு மாதம் நிரம்பிய 100 சிறுவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு மதியிறுக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்து 18 மாதங்கள் ஆகும்போது அந்தக் குழந்தைக்கு மதியிறுக்கம் இருக்கிறதா என சோதித்துப் பார்க்கலாம் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையும் தேசிய பல்கலைக்கழக பலதுறை மருந்தகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 18 மாதங்கள் நிரம்பிய 5,336 சிறுவர்களில் 1.1 விழுக்காட்டினருக்கு, சராசரியாக 100ல் ஒரு சிறாருக்கு, மதியிறுக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நரம்பியல் வளர்ச்சி தொடர்பான மதியிறுக்கம் 2016ஆம் ஆண்டில் 150 சிறார்களில் ஒருவருக்கு இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.
ஆறு வயது அல்லது அதற்கும் குறைந்த வயதுடைய சிறார்களில் பேச்சு, மொழி ஆற்றல், நடத்தை தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் உள்ளவர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 5,300ஆக இருந்தது. இது 2023ஆம் ஆண்டு 32 விழுக்காடு அதிகரித்து 7,000ஆக உயர்ந்தது.
இதுபோன்ற வளர்ச்சிப் பிரச்சினைகள் உள்ள சிறார்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினரிடம் மதியிறுக்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார அமைச்சு மேற்கூறிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தத் தரவுகள் கே கே மகளிர், சிறார் மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றின் குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம் பெறப்பட்டதாக அமைச்சு விளக்கியது.
இந்த உயர்வு பெரும்பாலும் அதிக விழிப்புணர்வு, சோதனைகளால் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதுபற்றிக் கருத்துரைத்த சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர், “சிறார்களின் குழந்தைப் பருவத்திலேயே ஏற்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு, குறிப்பிட்ட காலகட்டங்களில் அவர்களைப் பரிசோதனைக்கு அழைத்து வரும்படி பெற்றோரை ஊக்குவிப்பதால் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினைகள் இருக்கும் சிறார்களை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காண்பதே அதன் நோக்கம்,” என்று தெரிவித்தார்.
இதுபற்றிக் கூறும் கே கே மகளிர், சிறார் மருத்துவமனையின் சிறார் வளர்ச்சிப் பிரிவின் தலைவரும் மூத்த மருத்துவருமான லூர்ட்ஸ் மேரி டேனியல், மதியிறுக்கம் தொடர்பில் தற்பொழுது விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதாக விளக்கினார்.