புதிய வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்படும்போது பிப்ரவரி மாதம் சிங்கப்பூரர்களுக்கு மேலும் அதிகமான உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
வாழ்க்கைச் செலவினம் போன்ற சவால்கள் குறித்து பல சிங்கப்பூரர்கள் கவலைப்படுவதை அறிந்துள்ள அரசாங்கம் அதனைச் சமாளிப்பதற்கான வழிகளை ஆராய்வதாக அவர் கூறினார்.
ஜாலான் புசார் குழுத்தொகுதிக்கு சனிக்கிழமை (ஜனவரி 4) வருகை அளித்த அவர், ஒரு நாள் முன்னதாக ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்திற்கும் $300 சிடிசி பற்றுச்சீட்டு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரர்களுக்கு இது ஒரு நல்ல தொடக்கம். புதிய ஆண்டில் அவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
“வரவுசெலவுத் திட்டம் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது. சிங்கப்பூரர்களுக்கு அதிக உதவிகளைத் தொடர்ந்து செய்வோம்.
“உதவிகளுக்கான திட்டங்களையும் வழிவகைகளையும் அரசாங்கம் தொடர்ந்து ஆராயும்.
“மக்களின் அன்றாடக் கவலைகளில் வாழ்க்கைச் செலவினம் முக்கியமானது. நமது கனவுகளும் ஆசைகளும் நிறைவேற எவ்வாறு உதவலாம் என்று அரசாங்கம் சிந்திக்கும்,” என்றார் திரு வோங்.
இந்த 2025ஆம் ஆண்டு SG60 ஆண்டு என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், சிங்கப்பூர் நீண்ட பயணத்தைக் கடந்து வந்துள்ளது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் அவர் கூறுகையில், “சிங்கப்பூர் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை நம்மால் காணமுடியும்.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டது, குறிப்பாக நமது முன்னோடித் தலைமுறையினரும் மெர்டேக்கா தலைமுறையினரும் பாடுபட்டதால் அந்த முன்னேற்றம் சாத்தியமானது.
“SG60 ஆண்டு நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம் மட்டுமல்ல, ஒரு நாடாக நாம் எவ்வாறு கடந்து வந்துள்ளோம் என்பதை உணரும் வேளை இது.
“மேலும், ஒரு மக்களாக நாம் யார் என்பதையும், முக்கியமாக, அடுத்தத் தலைமுறைக்கான சிங்கப்பூர் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்த வேண்டி உள்ளது,” என்று பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.
2024 மே மாதம் சிங்கப்பூரின் பிரதமராகப் பொறுப்பேற்ற திரு வோங், தஞ்சோங் பகார், அங் மோ கியோ, தெம்பனிஸ் போன்ற பல்வேறு தொகுதிகளுக்கு வருகை அளித்தார்.
ஜாலான் புசார் தொகுதி உலா அவர் இந்த 2025ஆம் ஆண்டில் மேற்கொண்ட முதல் வருகை.
கிரேத்தா ஆயர் சதுக்கத்தில் ‘அன்புடன் உருவாகும் SG60’ என்னும் நடவடிக்கையில் பிரதமர் வோங் பங்கேற்றார்.
அங்கு கிரேத்தா ஆயர்-கிம் செங் (KAKS) வட்டாரத்தின் வசதிகுறைந்த 1,000 பேருக்கு ‘KAKS SG60’ பரிசுப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
கிரேத்தா ஆயர் பராமரிப்பு மையம் விரிவடைகிறது
மூப்படையும் சமூகத்தில் வயது மூத்தோருக்கான ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் மசெக அறநிறுவனத்தின் ‘ஸ்பார்க்கில் கேர்@ கிரேத்தா ஆயர்’ மையம் தற்போது இருக்கும் அளவைக் காட்டிலும் ஏறத்தாழ இருமடங்கு விரிவடைய உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 900க்கும் மேற்பட்ட மூத்தோருக்கு பகல்நேரப் பராமரிப்பு, மறுவாழ்வு சேவைகளை வழங்கியுள்ள இம்மையம் தற்போதுள்ள 460 சதுர மீட்டர் பரப்பளவிலிருந்து, 870 சதுர மீட்டராக விரிவடையவுள்ளதாக ஜனவரி 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் இந்த விரிவாக்கத்தைத் தொடர்ந்து, பகல்நேரப் பராமரிப்பு இடங்கள் 45ல் இருந்து 85ஆக உயரும். இந்த விரிவாக்கம், குறிப்பாக மறதிநோய் உள்ள மூத்தோருக்கான பராமரிப்பை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மூத்தோருக்கான அணுகல்தன்மையினை மேம்படுத்துதல், தலைமுறைகளுக்கிடையேயான சமூக இணைப்புகளை வலுவாக்குதல் உள்ளிட்டவற்றை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இவ்விரிவாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்மையம் உடல், அறிவாற்றல் சிகிச்சை, சமூக நலனில் கவனம் செலுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடும் என்றும், அதில் கூடுதலான தாதியர், சிகிச்சையாளர்கள், இயன்முறை மருத்துவ வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டு, மூத்தோருக்கான ஆதரவு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர், இரண்டாம் உள்துறை அமைச்சரும் மசெக சமூக அறநிறுவனத் தலைவருமான ஜோஸஃபின் டியோ அறிவித்தார்.
‘ஏஜ் வெல்’ முன்னெடுப்பின் மூலம் மூத்தோருக்கு ஆதரவளிக்க அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாடு குறித்துப் பேசினார் அமைச்சர் டியோ. மேலும், “மூத்தோர் சுறுசுறுப்புடன் இயங்கவும், பராமரிப்பாளர்களுக்குத் தேவையான ஆதரவையும் சமூகம் வழங்க வேண்டும்”, என்றும் கேட்டுக்கொண்டார்.
ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மசெக அறநிறுவனம் பாலர் மையங்களைத் தாண்டி மூத்தோர் நலனுக்காக ‘ஸ்பார்க்கில் கேர்’ மையங்களை அமைத்துள்ளது என்றும், இந்த குறிப்பிட்ட விரிவாக்கம் மூத்தோர் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்புவதாகவும் கூறினார்.