தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிஸ் ஒற்றுமை உணர்வைப் பேணிக் காப்போம்: அமைச்சர் மசகோஸ்

3 mins read
1019b0e7-dba3-48c6-9419-c98b922cb06f
தெம்பனிஸ் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அணிக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. -  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிஸ் குடியிருப்பாளர்களிடையே தொடர்ந்து ஒற்றுமையைப் பேணிவருவதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

தெம்பனிஸ் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அணிக்குத் தலைமை தாங்கும் அவர், புதன்கிழமை (ஏப்ரல் 23) அத்தொகுதிக்கான தமது கட்சித் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.

“குறிப்பாகச் சமூக அளவில் ஒற்றுமையைக் கடைப்பிடிப்போம்,” என்று திரு மசகோஸ் உறுதியளித்தார்.

முன்னதாக, காலை 11 மணியளவில் தெம்பனிஸ் குழுத்தொகுதி மசெக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

அவர்களுள் ஒருவரான நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல், போக்குவரத்து அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறோம் என்பது முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

“பதவிகளில் இருப்பவர்களாக இருந்தாலும் கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது முக்கியம்,” என்றார் திரு பே.

2011ஆம் ஆண்டு முதல் மாதம் ஒருமுறை காப்பிக் கடைகளில் குடியிருப்பாளர்களைச் சந்தித்து வருவதாக அவர் கூறினார்.

தம்மைச் சந்திக்கவரும் குடியிருப்பாளர்களில் 90 விழுக்காட்டினர், பெரும்பாலும் சமூக அளவிலான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வருகின்றனர் என்றார் அவர்.

“நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் என்றைக்கும் தமது தொகுதி மக்களைக் கவனித்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.

‘ஒன்றுபட்ட தெம்பனிஸ்’ எனும் கருப்பொருளையொட்டி தெம்பனிஸ் குழுத்தொகுதிக்கான தனது தேர்தல் அறிக்கையை மசெக வெளியிட்டது. தேர்தலில் வெற்றியடைந்தால் தெம்பனிஸ் வட்டாரத்தில் அடுத்த ஐந்தாண்டுகள் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களைக் குழுத்தொகுதி வேட்பாளர்கள் முன்வைத்தனர்.

புதிய ஒருங்கிணைந்த தெம்பனிஸ் நடுவம், தெம்பனிஸ் நார்த் எம்ஆர்டி பெருவிரைவு ரயில் நிலையம், பாசிர் ரிஸ், சீமெய் வட்டாரங்களை இணைக்கும் மிதிவண்டி வழித்தடம், கூரையுடன்கூடிய கூடுதல் நடைபாதைகள் போன்ற வசதிகள் அடுத்த ஐந்தாண்டுகளில் தெம்பனிஸ் வட்டாரத்தில் நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

புதிய வசதிகள் மட்டுமன்றி, தொடர்ந்து செயல்படும் தெம்பனிஸ் ஹப் போன்ற வளாகங்களில் மற்ற வட்டாரக் குடியிருப்பாளர்களையும் அதிகம் காணலாம் என்று திரு மசகோஸ் கூறினார்.

“தொடர்ந்து எல்லாரையும் வரவேற்பதுதான் தெம்பனிஸ்,” என்றார் அவர்.

மக்கள் சேவைக்கு என்றும் முடிவில்லை: டெஸ்மண்ட் சூ

தெம்பனிஸ் சாங்காட் தனித்தொகுதி வேட்பாளர் டெஸ்மண்ட் சூ.
தெம்பனிஸ் சாங்காட் தனித்தொகுதி வேட்பாளர் டெஸ்மண்ட் சூ. -  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“கடந்த பத்தாண்டுகள் தெம்பனிஸ் தொகுதியில் உழைத்துபோலத் தொடர்ந்து உழைத்துக் குடியிருப்பாளர்களுக்கு ஒரு குரலாக இருப்பேன்,” என்று தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதி வேட்பாளர் டெஸ்மண்ட் சூ தெரிவித்துள்ளார்.

“மக்களுக்கு நான் செய்யும் சேவை தொடரும்,” என்று அவர் உறுதியளித்தார்.

மசெக சார்பில் அந்தத் தனித்தொகுதியில் வேட்பாளராக நிற்கும் திரு சூ, புதன்கிழமையன்று அத்தொகுதிக்கான தமது கட்சியின் அறிக்கையை வெளியிட்டார்.

கடந்த பத்தாண்டுகளில் தாம் சந்தித்துச் சேவையாற்றிய குடியிருப்பாளர்களை நினைவுகூர்ந்த அவர், தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் தொடர்ந்து இளையர்கள், குடும்பங்கள், பெண்கள், மூத்த ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதிப்பதாகவும் உறுதிகூறினார்.

இதனால், ஒவ்வொரு தேர்தலும் முக்கியமானது என்று வலியுறுத்தினார் திரு சூ.

“எந்த ஒரு வாக்காளரையும் எடைபோடக் கூடாது. எல்லாருக்கும் இதில் ஒரு முக்கியப் பங்குண்டு,” என்றார் அவர்.

தேர்தலில் திரு சூ, பாட்டாளிக் கட்சியின் கென்னத் ஃபூவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

“எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் எவராக இருப்பினும் அவர்மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றும் திரு சூ கூறினார்.

குறிப்புச் சொற்கள்