புதுடெல்லி: அதிமுக-பாஜக கூட்டணி எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கனவை நிறைவேற்றும் அரசை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) அதிகாரபூா்வமாக அறிவித்த நிலையில், அதனை வரவேற்று பிரதமர் மோடி சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவு தமிழ்மொழியில் உள்ளது.
பிரதமர் மோடி தமது பதிவில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
“தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம்.
“மாமனிதா் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பாா்வையைச் செயல்படுத்தும் ஓர் அரசை உறுதிசெய்வோம்.
“தமிழ்நாட்டின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் தமிழ் கலாசாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை அதிமுக-பாஜக கூட்டணி செய்து முடிக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
தொடர்புடைய செய்திகள்
“தமிழை ஒழிக்க இந்தி, தமிழர்களது வளர்ச்சியைத் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள், தமிழ்நாட்டு உரிமையைப் பறிக்க தொகுதி மறுவரையறை - எனத் திட்டமிட்டு தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. பழைய கொத்தடிமைக் கூடாரமான அ.தி.மு.க.,வின் தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பா.ஜ.க. நிறைவேற்றப் பார்க்கிறது,” என்று தெரிவித்திருந்தார்.