வருமான ஏற்றத்தாழ்வைவிட செல்வ ஏற்றத்தாழ்வு அதிகம்: நிதி அமைச்சு

வருமான ஏற்றத்தாழ்வைவிட செல்வ ஏற்றத்தாழ்வு அதிகம்: நிதி அமைச்சு

2 mins read
552f10e9-958c-401c-829f-4bc1a41468aa
நிதி அமைச்சின் அண்மைய ஆய்வறிக்கை, வருமான ஏற்றத்தாழ்வை விட செல்வ ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு, சமூகப் பொருளியல் நிலையில் தனிநபர்கள், குடும்பங்களின் மாற்றம் குறைந்து வருவதையும் குறிப்பிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் செல்வ ஏற்றத்தாழ்வு குறித்த அளவீட்டை அரசாங்கம் முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமை (பிப்ரவரி 9) வெளியிடப்பட்ட நிதி அமைச்சின் ஆய்வறிக்கை, வருமான ஏற்றத்தாழ்வை விட செல்வ ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு, சமூகப் பொருளியல் நிலையில் தனிநபர்கள், குடும்பங்களின் மாற்றம் குறைந்து வருவதையும் குறிப்பிட்டது.

அரசாங்க வழங்குதொகையையும் வரிகளையும் கணக்கில்கொண்ட பிறகு, வருமான ஏற்றத்தாழ்வைக் கணக்கிடும் சிங்கப்பூரின் ‘ஜினி குறியீடு’ 0.38ஆக இருக்கும் நிலையில், செல்வ ஏற்றத்தாழ்வைக் கணக்கிடும் ‘ஜினி’ குறியீடு 0.55 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த அளவு ஒத்து இருக்கிறது. இருப்பினும், நாடுகளுக்கு இடையே ஜினி குறியீட்டை ஒப்பிடுவது அவ்வளவு எளிதன்று என ஆய்வறிக்கை குறிப்பிட்டது. தரவுகள் கிடைப்பது, சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள வேறுபாடுகளே இதற்குக் காரணம்.

தனியார் நிறுவனப் பங்குகள், வெளிநாட்டுச் சொத்துகள் போன்றவற்றைத் துல்லியமாகக் கண்காணிப்பது கடினம் என்பதால், செல்வத்தை அளவிடுவது உலகெங்கும் அரசாங்கங்களுக்குச் சவாலாகவே இருந்து வருகிறது.

முக்கிய நிதித் தரவுகளைப் பாதுகாக்கும் விதிகள், தரவு சேகரிப்பைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பெருஞ்செல்வந்தர்களின் சொத்து விவரங்கள் முழுமையாகப் பதிவாகாமல் போவதால், செல்வ ஏற்றத்தாழ்வு குறைவாகக் கணிக்கிடப்பட்டிருக்க சாத்தியம் உள்ளதாக அமைச்சு கூறியது.

2023ன் குடும்பச் செலவினக் கணக்கெடுப்பு, மத்திய சேம நிதி (மசேநி), சொத்துத் தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஜினி குறியீட்டின் அளவு கண்டறியப்பட்டது.

அனைத்து வருமானப் பிரிவினரின் சராசரி குடும்பச் சொத்து மதிப்பில், வீட்டுச் சொத்தின் பங்கும் மசேநி சேமிப்பும் பாதிக்குமேல் உள்ளன.

பெற்றோர் இருந்த சமூக நிலைக்கும் அவர்களின் பிள்ளைகள் வளரும்போது ஏற்படும் நிலைக்கும் இடையிலான வேறுபாட்டைப் பொறுத்தவரை கீழ், நடுத்தர வருமானக் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள், தங்கள் தந்தைமார்களை விட அதிக வருமானம் ஈட்டுவதில் சிங்கப்பூர் சிறந்து விளங்குகிறது.

ஆயினும், பொருளியல் முதிர்ச்சியடையும் சூழலில், பெற்றோரின் நிலையுடன் ஒப்பிடும்போது, அவர்களின் பிள்ளைகளின் முன்னேற்றம் மெதுவடைந்துள்ளது.

1978 முதல் 1989 வரை பிறந்தவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆகக் குறைந்த வருமானக் குடும்பங்களில் பிறந்தவர்கள், வளர்ந்த பிறகும் தங்கள் தந்தையரைப் போலவே அதே நிலையில் இருக்கும் போக்கு தொடர்வதாகத் தெரியவந்துள்ளது. காலப்போக்கில், பிள்ளைகள் வறுமைச் சுழற்சியிலிருந்து வெளிவருவது மென்மேலும் சவாலாகி வருவதை இது காட்டுகிறது.

செல்வ ஏற்றத்தாழ்வை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக குறிப்பிட்ட நிதி அமைச்சு, அதிக வசதியுள்ள குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்காக முதலீடு செய்யவும் சொத்துகளை மாற்றவும் அதிக வாய்ப்புள்ளது என்பதால், தலைமுறை தலைமுறையாக ஒரு வட்டத்திலேயே செல்வம் இருக்கும் நிலை உருவாகலாம் என்றும் கூறியது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், மசேநி சார்ந்த கொள்கைகள், செல்வ ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன என்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிசெய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சு வலியுறுத்தியது.

முழு ஆய்வறிக்கையை go.gov.sg/mof-inclusivegrowth எனும் இணையப்பக்கத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்