சிங்கப்பூரின் முதல் ஐம்பது பணக்காரர்களின் சொத்து மதிப்பு இவ்வாண்டு 23 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு, அவர்களின் சொத்து மதிப்பு 195 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இவ்வாண்டு அது 239 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது.
அதற்கு, இவ்வாண்டின் முதல் பாதியில் சிங்கப்பூர் பொருளியல் எதிர்பார்ப்பைக் கடந்து 4.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது முக்கியக் காரணம்.
புதிய வரிகளால் நிச்சயமற்ற உலகச் சூழல் நிலவும் வேளையிலும் ஏற்றுமதியில் காணப்பட்ட முன்னேற்றமும் செல்வந்தர்களின் செல்வ வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளது.
இவ்வாண்டுக்கான 50 சிங்கப்பூர் பெருஞ்செல்வந்தர்களின் பட்டியலில் மெட்டா தளங்களின் இணை நிறுவனர் எட்வர்டோ சேவரின் முதல்நிலையில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் வரிசைப்படுத்தி உள்ளது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர், இந்த முதல்நிலையை தொடர்ச்சியாக மூன்றாண்டுகளாகத் தக்கவைத்து வருகிறார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு US$43 பில்லியன்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் US$14 பில்லியன் அதிகமாகி உள்ளது அவரது சொத்து மதிப்பு.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விளம்பரங்கள் மெட்டா தளத்தின் பங்குவிலைகள் உயரக் காரணமாக அமைந்தன. திரு எட்வர்ட்டோவின் வருவாய் உயர்வுக்கு அது உறுதுணை புரிந்தது.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது நிலையில் சொத்துச் சந்தைப் பெரும்புள்ளி குவெக் லெங் பெங்கும் அவரது குடும்பமும் வந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு புள்ளிகள் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார். அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 24% அதிகரித்து US$14.3 பில்லியன் ஆனது.
சொத்துச் சந்தையின் முன்னணி சகோதரர்களான ராபர்ட் மற்றும் ஃபிலிப் இங், கடந்த ஆண்டு இரண்டாம் நிலையில் இருந்து மூன்றாம் இடத்திற்கு இறங்கிவிட்டனர்.
அவர்களின் சொத்து மதிப்பு US$14.4 பில்லியனில் இருந்து US$14.1 பில்லியனாகக் குறைந்தது அதற்குக் காரணம்.
ஹாங்காங்கில் சொத்து நிறுவனத் தொழில் இறக்கம் கண்டதால் அவர்களுக்கு அந்த நிலை ஏற்பட்டதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டது.