ஹோர்முஸ் நீரிணையை ஆயுதமாகப் பயன்படுத்துவது ஆபத்தான முன்னுதாரணம்: பிரதமர் வோங்

ஹோர்முஸ் நீரிணையை ஆயுதமாகப் பயன்படுத்துவது ஆபத்தான முன்னுதாரணம்: பிரதமர் வோங்

1 mins read
4255a07b-d991-48d3-ad2e-c7e292337076
ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக பிரான்சும் பிரிட்டனும் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் பேசினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

அனைத்துலக நீர்வழியைச் சட்டவிரோதமாக, ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த எந்த ஒரு தரப்பினரையும் அனுமதிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

அந்த உதாரணம் மூலம் இதேபோன்று பிற முக்கியக் கடல்வழிப் பாதைகளும் குறிவைக்கப்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“உலகின் மிகவும் சுறுசுறுப்பான கடல்வழிப் பாதைகளான மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணைகளின் ஓரத்தில் அமைந்துள்ளதால், சிங்கப்பூர் இந்த விவகாரத்தை உற்றுநோக்குகிறது,” என்று ஹோர்முஸ் நீரிணை குறித்த கூட்டத்தில் உலகத் தலைவர்களிடம் திரு வோங் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) நடைபெற்ற அந்தக் கூட்டத்திற்கு பிரான்சும் பிரிட்டனும் ஏற்பாடு செய்திருந்தன.

“எனவே, இத்தகு வழிமுறையை உலகம் தாங்கிக்கொள்ளாது. அவ்வாறு செய்தால், அதிக ஒழுங்கற்ற மற்றும் நிலையற்றதோர் உலகத்தைத்தான் நாம் சந்திக்க இயலும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கடல்சார் சட்ட உடன்பாட்டில் ‘கடந்து செல்லும் உரிமை’ உறுதிசெய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் வோங், கடல்வழிப் பயண உரிமைகளையும் சுதந்திரங்களையும் நிலைநிறுத்துவது அனைத்துலகச் சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கு உகந்ததாகும் என்றார்.

“அதேநேரம், முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் பாதைகள் தொடர்ந்து திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் அனைவரும் அணுகக்கூடிய வகையிலும் இருப்பதை உறுதிசெய்வதும் அவசியம்,” என்று திரு வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்