குழந்தைகள் மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டிகளை சுகாதார அமைச்சு கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டது.
அதன்படி, 18 மாதங்களுக்கு குறைவான மழலையர்கள், மின்திரை சார்ந்த எவ்விதக் கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. அதேசமயம், 18 மாதம் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள், ஒரு நாளில் அரை மணி நேரத்துக்குக் குறைவாகவே அவ்வாறான மின்திரைகளைக் காணலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.
இதன் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் அறிய வேண்டும் என்பதால் அவர்களுக்கு தனிப்பட்ட பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டு ஜனவரி மாதம் பாலர்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழகம் (என்ஐஇசி) குழந்தைகளுக்கான மின்திரைப் பயன்பாட்டு வழிகாட்டிகள் குறித்து இணையத்தில் இலவசப் பயிலரங்கு ஒன்றை நடத்தியது. அதில் 800க்கும் மேற்பட்ட பாலர்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
வழக்கமாக பாலர் வகுப்புகளில் தூங்கும் வேளையில் ஆசிரியர்களுக்கு இந்த இணையப் பயிலரங்கு நடந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இத்தகைய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவை பன்முகத்தன்மை, தலைமைத்துவம், வகுப்பறை நிர்வாகம் போன்ற பல தலைப்புகளில் நடத்தப்படுகின்றன.
குழந்தைகள் அதிக நேரம் கணினி, தொலைபேசித் திரைகளைப் பார்ப்பதால் விளையும் தீங்குகள் பற்றி பயிலரங்கில் ஆலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமாக, மின்கருவிகளைக் கொண்டு இசை ஒலிப்பதுகூட மின்திரையைப் பயன்படுத்துவதாக கருதப்படும் என்பது பல ஆசிரியர்களை வியக்கவைத்தது.
அது செயலற்ற திரை நேரம் (Passive Screen time) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சில ஆசிரியர்கள் இனி ஒலிக்கருவிகளைப் பயன்படுத்தாது இயற்கையாகத் தாங்களே பாடி குழந்தைகளுக்கு அமைதி ஊட்டவிருப்பதாக தெரிவித்தனர்.
பல புதிய உத்திகளை பாலர்களிடம் பயன்படுத்தும்படி பயிலரங்கில் ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். ஒலிக்கருவிகளைக் கவனமாகத் தேர்வுசெய்தல், மின்னிலக்கச் சாதனங்களை விடுத்து நேரடியாகக் குழந்தைகளுடன் விளையாடுதல், வகுப்பில் மின்திரையற்ற அதிக இடங்களைப் பகிர்தல் போன்ற வழிமுறைகள் பயிலரங்கில் ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

