தெம்பனிஸ் குடியிருப்பாளர்களுக்கான புதிய தேடுதல் இணையத்தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
‘தெம்பனிஸ்கேர்ஸ்கோவேர்’ என்பது அதன் பெயர்.
வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றமும் சிங்ஹெல்த்தும் இணைந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்த இணையத்தளத்தைத் தொடங்கியுள்ளன.
தெம்பனிஸ் வட்டாரத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300,000 குடியிருப்பாளர்கள் அந்த வட்டாரத்தில் அமைந்திருக்கும் மருந்தகங்கள், முதியோர் பராமரிப்புச் சேவை நிலையங்கள், அரசாங்கச் சேவை அமைப்புகள் போன்றவை குறித்த தகவல்களை இந்த இணையத்தளத்தில் பெறலாம்.
குறிப்பிட்ட நகர்வாசிகளுக்கான, இத்தகைய தகவல்களை வழங்கும் முதல் தளம் இது.
‘தெம்பனிஸ்கேர்ஸ்கோவேர்’ இணையத்தளத்தில் 84 சுகாதாரப் பராமரிப்புச் சேவை நிலையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மருந்தகங்கள், மறுவாழ்வு மையங்கள், சமூக சேவை நிலையங்கள் உள்ளிட்ட அரசாங்கச் சேவை அமைப்புகள், குடும்பங்களுக்குச் சேவை வழங்கும் சமூக சேவை நிலையங்கள் போன்றவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் தெம்பனிஸ் வட்டாரத்தில் அமைந்துள்ளவை.
‘கவ்டெக்’ எனப்படும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பயனாளர்கள், ஓர் இடத்தின் அஞ்சல் குறியீட்டு எண்ணையோ முக்கியச் சொல்லையோ பயன்படுத்தி தங்களுக்குத் தேவைப்படும் விவரங்களை இதில் தேட முடியும்.
இளையர், குடும்பங்கள், மூத்தோர் போன்ற பிரிவுகளின் அடிப்படையிலும் தேட இயலும்.
வடகிழக்கு மாவட்ட மேயர் டெஸ்மண்ட் சூ, “இவ்வாறு ஒரே தளத்தில் தகவல்களை வழங்குவதால் அனைவரும் எளிதில் தேடி, இச்சேவைகளைப் பயன்படுத்த முடியும். சமூகத்திற்கான மேம்பட்ட ஆதரவை வழங்குவது தொடர்பில் பங்காளித்துவ அமைப்புகளின் ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, அனைவருக்கும் அவரவர்க்குத் தேவையான பராமரிப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் முயற்சி இது,” என்று கூறினார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி, இந்த இணையத்தளம் பராமரிப்புச் சேவையாளர்களுக்கும் உதவக்கூடியது என்று குறிப்பிட்டார்.
இதேபோன்ற வசதிகளை மற்ற நகர்ப்புறங்கள் உருவாக்க விரும்பினால் அவர்களுக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
‘நமது தெம்பனிஸ் நடுவம்’, சமூக மன்றங்கள் ஆகியவற்றில் இந்த இணையத்தளம் குறித்த தகவல் குறிப்பேடுகள் கிடைக்கும் என்று வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றப் பேச்சாளர் கூறினார்.
தெம்பனிஸ் வட்டாரத்துக்கான இந்தத் தனிப்பட்ட தகவல் தளத்தை வரவேற்பதாகக் கூறிய குடியிருப்பாளர்கள் சிலர், கூகல் தளத்தில் தேடுவதைவிட இது நேரடியாகவும் விரைவாகவும் கண்டுபிடிக்க உதவும் என்று கருதுவதாகக் கூறினர்.