சுய தீவிரவாத போக்குக்கு ஆளாகத் தேவைப்படும் நேரத்தை சில இணையத்தளங்கள் பாதியாகக் குறைத்துள்ளன.
2015ஆம் ஆண்டுக்கு முன்பு, சிங்கப்பூரில் ஒருவர் சுய தீவிரவாதப் போக்குக்கு ஆளாக சராசரியாக 24 மாதங்களாகின.
2021ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சமூக ஊடகம் மூலம் சிலர் சராசரியாக 12 மாதங்களில் சுய தீவிரவாத போக்குக்கு ஆளாகினர்.
இந்தத் தகவலை உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை, பயங்கரவாதம் தொடர்பான அதன் வருடாந்திர அறிக்கை வாயிலாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) வெளியிட்டது.
செயற்கை நுண்ணறிவு போன்ற புத்தாக்க அம்சங்கள் பயங்கரவாத மிரட்டலை உலகளாவிய, உள்ளூர் நிலையில் சிக்கலாக்குவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கூறியது.
சிங்கப்பூரில் பதிவான இரண்டு வழக்குகளில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவு ‘சட்போட்’ பயன்படுத்தப்பட்டது.
சுய தீவிரவாத போக்குக்கு ஆளான சிங்கப்பூரர்களில் பலருக்குத் தீவிரவாத சித்தாந்தங்களுடனான அறிமுகம் இணையத்தில் தற்செயலாக ஏற்பட்டதாக விசாரணையின் மூலம் தெரியவந்தது.
அத்தகைய பதிவுகளை அவர்கள் கண்ட பிறகு, சமூக ஊடகம் அதுபோன்ற பதிவுகள் கொண்ட பக்கங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
இதன் விளைவாக ஒரு சில மாதங்களிலேயே சில சுய தீவிரவாத போக்குக்கு ஆளானதாக உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கூறியது.
கடந்த பிப்ரவரி மாதம் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 15 வயது சிறுமியை அது உதாரணம் காட்டியது.
அச்சிறுமி ஒரு சில வாரங்களிலேயே சுய தீவிரவாத போக்குக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைப் பரப்பு அறிக்கையை அச்சிறுமி இணையத்தில் கண்டார். ஒரு மாதம் கழித்து, அந்த அமைப்புக்கு விசுவாசமாக நடந்துகொள்ள இருப்பதாக அவர் உறுதி பூண்டார்.
மேலும், ஐஎஸ் பயங்கரவாதியைத் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார். குறைந்தது எட்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்களுடன் அச்சிறுமி இணையம் மூலம் தொடர்பு வைத்திருந்தார்.