இணைய வர்த்தகத் தளங்களில் விளம்பரப்படுத்தப்படும் சமூக மன்றப் பற்றுச்சீட்டுகள், எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றின் விற்பனையை அகற்ற கெரூசல், ஃபேஸ்புக் மார்கெட்பிளேஸ் ஆகிய தளங்களுடன் இணைந்து செயல்படப்போவதாகச் சமூக மேம்பாட்டு மன்றங்கள் தெரிவித்துள்ளன.
பற்றுச்சீட்டுகள் மறுவிற்பனைக்கானவை அல்ல என்றும் அவற்றை ரொக்கத்துக்காக மாற்றிக்கொள்ள முடியாது என்றும் மன்றங்களின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய சோதனையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஃபேஸ்புக் மார்கெட்பிளேஸ் தளத்தில் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளையும் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளையும் விற்பனை செய்யும் குறைந்தது ஆறு பதிவுகள் கண்டறியப்பட்டன.
அவற்றுள் $800 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் $600க்கு விற்கப்படுகின்றன.
கெருசல் தளத்திலிருந்து ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குப் பின் குறைந்தது மூன்று சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் நீக்கப்பட்டன.
பெரும்பாலான விளம்பரங்களில் பற்றுச்சீட்டுகள் அவற்றின் மதிப்பைவிட குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
ஜூலை மாதம், 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் $800 மதிப்புள்ள எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றனர். 21 வயதிலிருந்து 59 வயதுக்கு இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் $600 மதிப்புள்ள எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றனர். அவற்றை அடுத்த ஆண்டு டிசம்பர் 31 வரை பயன்படுத்த முடியும்.
சமூக மன்றப் பற்றுச்சீட்டுகளைப் போல எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளை 23,000க்கும் அதிகமான உணவங்காடிக் கடைகளிலும் அக்கம்பக்கக் கடைகளிலும் பயன்படுத்தலாம். தீவெங்கும் உள்ள 400க்கும் அதிகமான பேரங்காடிகளிலும் பற்றுச்சீட்டுகள் செல்லுபடியாகும்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு ஜனவரியில் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பெறும்படி வெளிவந்த அதிகாரபூர்வமற்ற இணைப்புகள் குறித்து சமூக மேம்பாட்டு மன்றங்கள் காவல்துறையிடம் புகாரளித்தன.