மண்டேலே: மியன்மாரை ஆளும் ராணுவ ஆட்சியாளர்கள், நாட்டில் ஒரு வாரம் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று திங்கட்கிழமை (மார்ச் 31) அறிவித்துள்ளனர்.
மியன்மாரை அண்மையில் உலுக்கிய நிலநடுக்கத்தில் 1,700க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்போரைத் தேடி மீட்பது குறித்த நம்பிக்கை குறைவதாகக் கூறப்படும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியானது.
அதன்கீழ், ஏப்ரல் 6ஆம் தேதி வரை மியன்மாரில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதம், பொருட்சேதத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மியன்மார் அரசாங்கம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் மேலும் 300 பேரைக் காணவில்லை என்றும் மியன்மார் தெரிவித்துள்ளது.