புக்கிட் பாத்தோக் வாகன ஓட்டுநர் நிலையத்தில் பயிற்சிகளுக்கான முன்பதிவுகளைச் செய்ய சிரமப்படும் புதிய ஓட்டுநர்களுக்கு இப்போது அங்குக் கூடுதல் இடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், வார இறுதி நாள்களில் பயிற்சிகளுக்கான இடங்களுக்குப் பதிவு செய்ய கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.
கிளாஸ் 3 கார்கள், கிளாஸ் 3எ தானியக்கக் கார்களுக்கான பயிற்சிகள் சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழங்கப்படுகின்றன. இரு நாள்களிலும் மாலை 5.10லிருந்து 6.50 மணிக்கும் இரவு 7.20லிருந்து 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பயிற்சிகள் நடைபெறும்.
புதிதாக வாகனம் ஓட்ட பழகுவோர் அந்த இரண்டு நேரங்களிலும் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு $45 கூடுதல் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஒவ்வோர் இடத்துக்குமான கட்டணம் $135.16. அது, தற்போதுள்ள உச்ச நேர இடங்களைவிட கிட்டத்தட்ட 57 விழுக்காடு அதிகம்.
சிங்கப்பூரின் மூன்று ஓட்டுநர் பயிற்சி நிலையங்களிலும் கட்டணம் அதிகரித்தபோதும் இவ்வாண்டு தொடக்கத்தில் பயிற்சிகளுக்கான தேவை கணிசமாகக் கூடியது.
2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து கடந்த ஆண்டு மே மாதம்வரை கிட்டத்தட்ட 44,520 பயிற்சி ஓட்டுநர்கள், கிளாஸ் 3 பிரிவுக்கான ஓட்டுநர் தேர்வை மேற்கொண்டனர்.
2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை ஏறக்குறைய 35,800ஆக இருந்தது.
இந்நிலையில், புக்கிட் பாத்தோக் ஓட்டுநர் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும் கூடுதல் இடங்கள், விரைவில் தங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற விரும்புவோருக்கான காத்திருக்கும் காலத்தைக் குறைக்க உதவுகிறது என்றார் நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி.
வார இறுதிகளில் உள்ள இடங்கள் குறித்து பயிற்சி நிலைய அவசர எண்ணுக்கு வெள்ளிக்கிழமை காலை தொடர்புகொண்டு விசாரிக்கலாம். காலியான இடங்களை முன்பதிவு செய்ய பயிற்சிக்கான கட்டணத்துடன் கூடுதலாக $45 கட்டணத்தையும் செலுத்தவேண்டும்.
தற்போது 100க்கும் மேற்பட்ட பயிற்சி ஓட்டுநர்கள் பட்டியலில் காத்திருப்பதாக நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி கூறினார்.
ஒவ்வொரு வார இறுதியிலும் கிட்டத்தட்ட 15லிருந்து 20 காலி இடங்கள் இருப்பதாகச் சொன்ன அவர், உடனடியாக அவை நிரம்பிவிடுவதையும் சுட்டினார்.


