அண்மையில் பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் அலையாடல் (Kitefoiling) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் சிங்கப்பூரின் 17 வயது மேக்சிமிலியன் மெய்டர்.
சிங்கப்பூருக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களில் இவர்தான் ஆக இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இளம் சாதனை வீரர் ஆகஸ்ட் 13ஆம் தேதி அதிகாலை நாடு திரும்பினார்.
அவரை வரவேற்க சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3ல் ஏறத்தாழ 60 பேர் திரண்டனர்.
அவர்களில் கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சர் எட்வின் டோங், சிங்கப்பூர் படகோட்டச் சம்மேளனத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஊடகத்துறையைச் சேர்ந்த 20 பேர், ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான படகோட்டப் போட்டியில் போட்டியிட்ட சிங்கப்பூர் வீரரான 27 வயது ராயன் லோ ஆகியோர் அடங்குவர்.
மேக்சிமிலியனை வரவேற்க திரண்டோரில் பலர் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் சாங்கி விமான நிலையத்தில் கூடினர்.
பாரிசிலிருந்து 13 மணி நேர விமானப் பயணத்துக்குப் பிறகு சிங்கப்பூர் வந்தடைந்த மேக்சிமிலியனைப் பார்த்ததும் அவர்கள் அனைவரும் அவரை இன்முகத்துடன் வரவேற்று ஆரவாரம் செய்தனர்.
மேக்சிமிலியனின் கழுத்தில் அமைச்சர் டோங் மாலை அணிவித்துக் கௌரவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“எனக்குக் கிடைத்துள்ள தடபுடலான வரவேற்பைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றிப் பயணத்தை வர்ணிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. எனது கடுமையான உழைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது எனக்கு மனநிறைவைத் தருகிறது.
“இந்த அதிகாலை நேரத்தில் இத்தனை பேர் என்னை வரவேற்க வந்துள்ளனர். இதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனக்கு மறக்க முடியாத ஒரு தருணம்,” என்று மேக்சிமிலியன் உணர்ச்சிப் பொங்க கூறினார்.