தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வட்ட ரயில் பாதை வழிகாட்டிக் குறியீடுகளுக்கு மக்கள் கருத்து வரவேற்பு

2 mins read
d89e2a57-b894-4cfb-96d5-0908bb6ddb02
பயணிகள் செல்ல விரும்பும் பாதைகளின் மாதிரி வழிகாட்டிக் குறியீடுகள், நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அவர்களின் கருத்துகளை அவற்றில் காணப்படும் விரைவுத் தகவல் (QR) குறியீட்டை வருடி தெரிவிக்கலாம். - படம்: சாவ் பாவ்

வட்ட ரயில் பாதைகளில் உள்ள நிலையங்களில் நிலப் போக்குவரத்து ஆணையம் புதிய வழிகாட்டி அறிவிப்புகளை பொருத்தவிருக்கிறது.

கெப்பல், கென்டோன்மன்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய நிலையங்கள் 2026ம் ஆண்டின் முதல்பாதியில் திறக்கப்படவுள்ளன. ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்துக்கும் மரினா பே நிலையத்துக்கும் இடையே உள்ள ரயில் பாதைகள் அப்போது நிறுத்தப்படும். பயணிகள் செல்ல விரும்பும் ரயில் வழிப்பாதைகளை அறிவிக்கும் இந்த வழிகாட்டிக் குறியீடுகள் ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

வட்டப் பாதையின் ஆறாம் கட்ட விரிவாக்கப் பணிகள் புதிய சேவைத் தடங்களை அறிமுகப்படுத்தும். அவை மற்ற எம்ஆர்டி பாதைகளில் இல்லாதவையாக அமையும்.

பல வளைவு சுழிவுப் பாதைகளை பயணிகள் மேற்கொள்ளவேண்டியிருக்கலாம். மேலும் சில நிலையங்களில் ரயில் தண்டவாளங்கள் மாறுபட்ட மாடிகளில் இருக்கும். எனவே, அவற்றை சென்றடைய முறையாக ஒரு வழியை கண்டறிய வேண்டும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

ஆகவே, மார்ச் 14 முதல் 17ம் தேதிவரை பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் பங்கேற்கலாம். சன்டெக் சிட்டி கடைத்தொகுதியைப் புரோமினாட் ரயில் நிலையத்துடன் இணைக்கும் வாயில், அந்நிலையத்தின் கட்டண வாயில் (Exit C அருகில்), தண்டவாளத் தடம் (Platform B) ஆகிய இடங்களில் விரைவுத் தகவல் (QR) குறியீட்டை வருடி கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

பயணிகள் செல்ல விரும்பும் பாதைகளின் மாதிரி வழிகாட்டி வடிவங்கள் புரோமினாட் நிலைய தண்டவாளத் தடம் (Platform B) அருகில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு டோபிகாட் மற்றும் மரினா பே நிலையங்களுக்கு இடையே ரயில்கள் பயணிக்கின்றன.

நிலப் போக்குவரத்து அதிகாரிகளும் அங்கு பணியில் இருந்து உதவி தேவைப்படுவோருக்கு உதவுவர். ரயில்களிலும் நிலையங்களிலும் அமையவுள்ள பற்பல வழிகாட்டிகளுக்கான குறியீடுகளைப் பயணிகள் தேர்வுசெய்யலாம். ரயில் தண்டவாளத் தடங்கள் அருகே, ரயில்களின் உட்பகுதி, ரயில்களின் வரவை முன்னுரைக்கும் மின்னியல் வழிகாட்டிகள் ஆகியவை அறிவிப்பு சின்னங்களில் அடங்கும்.

இதற்கு முன்பாக நிலப்போக்குவரத்து ஆணையம், பயணிகள், மாணவர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் என 50 பங்காளிகளுடன் கருத்துக் கணிப்புகள் நடத்திய பின்னரே, தற்போதைய குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் go.gov.sg/ccl6pe என்ற இணைய முகவரியிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்