வேலை அனுபவத் திட்டங்களுக்கு வரவேற்பு; கூடுதல் வழிகாட்டுதலுக்கு எதிர்பார்ப்பு

சிங்கப்பூர் இளையர்களின் வேலைவாய்ப்பு சவால்கள்

வேலை அனுபவத் திட்டங்களுக்கு வரவேற்பு; கூடுதல் வழிகாட்டுதலுக்கு எதிர்பார்ப்பு

2 mins read
56a96515-34ca-4580-9f72-496f6d85cdca
அண்மையில் அறிமுகம் கண்ட எஸ்ஜி இளையர் திட்டம் சிங்கப்பூர் இளையர்களின் வேலைவாய்ப்பு கவலைகளைத் தணிக்க உதவும் நல்ல தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இளையர்களுக்கான ‘எஸ்ஜி இளையர் திட்டம்’ என்பதன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறுகிய கால ‘வேலை அனுபவத் திட்டங்கள்’ வரவேற்பைப் பெற்றுள்ளன. 

இருப்பினும், வேலைவாய்ப்பு சார்ந்த எதிர்கால அச்சங்களைப் போக்க மேலும் ஆழமான இலக்குடன் கூடிய வாழ்க்கைத் தொழில் வழிகாட்டுதல்களை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட  அந்த ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தொழில் அறிமுக வாய்ப்புகள் எதிர்கால வேலைவாய்ப்பு கவலைகளைத் தணிக்க உதவும் நல்ல தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.  

ஜூலை 25ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், 15 முதல் 35 வயது வரையிலான சுமார் 500,000 இளையர்களைச் சென்றடைய இலக்கு கொண்டுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 30,000 தொழில் அறிமுக வாய்ப்புகள் வரை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரை நாள் முதல் சில வாரங்கள் வரை பல்வேறு நிறுவனங்கள், தொழில்துறைகளின் நேரடிப் பணி அனுபவத்தை இளையர்கள் பெற முடியும்.  

இந்த வாய்ப்புகள் பற்றி கருத்துரைத்த தொடக்கக் கல்லூரி மாணவி மரிசா ஓங், 17, “விடுமுறைக் காலத்தில் இத்திட்டத்தைப் பயன்படுத்த உள்ளேன். நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவது, நான் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுக்க மிகவும் உதவியாக இருக்கும்,” என்றார்.  

உயிரோவியம் (அனிமேஷன்) துறையில் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, தற்போது கல்வித்துறைக்கு மாற விரும்பி தேசிய கல்விக்கழகத்தில்  சேரத் திட்டமிடும் 19 வயது லியோ எர் சி, “எனக்கு கல்வித் துறையில் எந்தப் பின்னணியும் இல்லை. என்னைப்போல் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் வழிகாட்டியாக இருக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

அதேவேளையில், பட்டதாரி லதீஷா சோனியா 24, “நிதி நெருக்கடிமிக்க வேலைவாய்ப்புச் சூழல் நிலவும் இக்காலத்தில், அரசாங்கம் நம்மை அப்படியே விட்டுவிடாமல், வேலைக்கு மாறுவதற்கான வழிகாட்டுதலை அளிப்பது நம்பிக்கையளிக்கிறது,” என்றார்.  

மேலும், 30 வயதான மென்பொருள் பொறியாளர் டான் சூ யான், வேலைமாற விரும்பும் தம்மைப் போன்ற மூத்த இளையர்களுக்கு ஏற்றவாறு இத்திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கருதுகிறார்.  

இதற்கிடையே, இத்திட்டம் குறித்து பேசிய ‘ஏக்செஸ் சிங்கப்பூர்’ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கிளாரன்ஸ் சிங், பின்னடைவைச் சந்தித்து வரும்  இளையர்களுக்கு இத்திட்டம் சமமான வாய்ப்புகளை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

எனினும், குறுகிய கால அனுபவங்கள் மட்டுமே போதாது என்றும் ஆழமான வழிகாட்டுதல்களுடன் தொழில் ஆலோசனைகள் இணையும்போதே இது முழுப் பலன் தரும் என்றும்  அவர் வலியுறுத்தினார்.  

குறிப்புச் சொற்கள்
புதிய வேலைகள்இளையர்சிங்கப்பூர்வேலைவாய்ப்பு