நன்கு படித்தவர்களே போதைப் பழக்கத்தால் அவதி

நன்கு படித்தவர்களே போதைப் பழக்கத்தால் அவதி

2 mins read
b70a7a8d-a4d2-47b5-bbe4-1eedcc5c3715
பதினோர் ஆண்டுகள், பலமுறை மீண்டும் போதைக்கு அடிமையாதல், போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் மூன்று மாத சிறைவாசம் ஆகியவற்றுக்குப் பிறகும், ஜான் இன்னும் மீண்டுவரும் பாதையில்தான் இருக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பல ஆண்டுகளாக, கொர்னிலியஸ் டான் சந்தைப்படுத்தல் துறையில் ஒரு சிறப்பான வாழ்க்கைத்தொழிலைக் கொண்டிருந்தபோதிலும், ரகசியமாக மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருளைச் சார்ந்திருந்தார்.

2022ல் அவர் கைது செய்யப்பட்டு, சாங்கி சிறையின் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் (டிஆர்சி) ஆறு மாதகாலத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டபோது, ​​அவரது இரட்டை வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அங்கு, அவரைப் போலவே போதைப்பொருள் பயன்படுத்திய ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், வங்கியாளர்கள் மற்றும் பிற உயர்பதவியில் உள்ள தொழில் நிபுணர்களை அவர் சந்தித்தார்.

“மேலோட்டமாகப் பார்த்தால், நாங்கள் நன்றாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் மிகவும் வெற்றிகரமானவர்கள். ஆனால் அதன் அடிநாதத்தில், எங்களுக்கு ஒரு பொதுவான பிரச்சினை இருந்தது. அது இதயம்,” என்று 37 வயதான டான், ஜூலை மாதம் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சிங்கப்பூரின் மக்கள்தொகையில், டானைப் போன்று நன்கு படித்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் போதைப்பொருளைப் புழங்குகின்றனர்.

சிங்கப்பூர் சிறைத்துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2021ல் 204 ஆக இருந்த நிலையில், 2025ல் டிஆர்சியில் உள்ள 293 கைதிகள் உயர்கல்வி அல்லது உயர் தகுதிகளைப் பெற்றிருந்தனர்.

2021ல் 8.8 விழுக்காடாக இருந்த நிலையில், 2025ல் புதிதாகச் சேர்க்கப்படும் கைதிகளில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவர் இவர்களாக இருப்பார்கள். இவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டயங்கள் முதல் முனைவர் பட்டங்கள் வரை வைத்துள்ளனர்.

அதிகக் கல்வி கற்றவர்களைச் சிங்கப்பூரின் மக்கள் தொகை கொண்டிருப்பதால், இந்தப் போக்கு எதிர்பார்க்கக்கூடியதே என மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (சிஎன்பி) பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில், 25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, குறைந்தபட்சம் உயர்கல்வி பெற்ற குடியிருப்பாளர்களின் பங்கு 42.9 விழுக்காட்டிலிருந்து 54.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

“போதைப்பொருள் பயன்பாடு என்பது குறைந்த கல்வி பெற்றவர்கள், வேலையில்லாதவர்கள் அல்லது சமூக ரீதியாகப் பின்தங்கியவர்களிடம் மட்டும் காணப்படுவதில்லை என்ற புரிதல் அதிகரித்து வருகிறது,” என்று உளவியல் சிகிச்சை நிலையத்தின் மூத்த ஆலோசகரான கோபால் மஹே கூறினார்.

“இந்தப் போக்கிற்கான காரணங்களில், உலகளாவிய போதைப்பொருள் சந்தையின் விரிவாக்கம், செயற்கை போதைப்பொருள்கள் எளிதாகக் கிடைப்பது அதிகரித்துள்ளமை ஆகியவை அடங்கும்,” என்றும் அவர் கூறினார்.

தொடக்கக் கல்லூரி முன்னாள் ஆசிரியரான ஜான் (உண்மைப் பெயரன்று), இதேபோல் கிட்டத்தட்ட ஆறு மாதகாலம் தனது போதைப்பழக்கத்தை மறைத்துக்கொண்டே தொடர்ந்து கற்பித்து வந்தார். 2015ல் நடந்த ஒரு கூட்டத்தில் அவருக்கு ‘மெத்’ அறிமுகமானது.

“நான் என்னைச் சுற்றியுள்ள சிலருடன் தொடர்புகொள்ள முயன்றேன்,” என்று அவர் கூறினார்.

பதினோர் ஆண்டுகள், பலமுறை மீண்டும் போதைக்கு அடிமையாதல், போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் மூன்று மாத சிறைவாசம் ஆகியவற்றுக்குப் பிறகும், ஜான் இன்னும் மீண்டுவரும் பாதையில்தான் இருக்கிறார். அண்மையில் அவர் மீது போதைப்பொருள் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் அவர் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.

குறிப்புச் சொற்கள்
விரிவாக்கம்போதைப்பொருள்உளவியல்