ரயில் பயணிகள் வேலையிடங்களுக்கோ வீட்டுக்கோ செல்லும் வழியில் டௌன்டவுன் தடத்தில் உள்ள தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்தில் நடத்தப்படும் உடலுறுதி வகுப்புகளிலும் நல்வாழ்வுத் திட்டங்களிலும் கலந்துகொள்ளலாம்.
பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட், அங்கு 15,000 சதுர அடிப் பரப்பளவில் ஒரு புதிய நல்வாழ்வுக் கிராமத்தை நிறுவியுள்ளது. பயணிகளும் குடியிருப்பாளர்களும் உடற்பயிற்சி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அது மேலும் எளிமையாக்கும்.
போக்குவரத்து முனையங்களைச் சமூக நடுவங்களாக மாற்ற முனையும் கிராமங்களை உருவாக்க எஸ்பிஎஸ் டிரான்சிட் திட்டமிடுகிறது. அத்தகைய கிராமங்களில் முதலாவதாக இப்போது தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
உடலுறுதி வகுப்புகள், சுகாதார உரை நிகழ்ச்சிகள், நல்வாழ்வுப் பயிலரங்குகள் முதலியவை அங்கு இடம்பெறும். புதிய கிராமத்தில் முழு நீளச் சுவர்க் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. நடனம், பிலாட்டே, யோகாசனம் முதலிய வகுப்புகளின்போது பொதுமக்களுக்கு அவை உதவியாக இருக்கும்.
சுவர்களில் உற்சாகமூட்டும் வண்ண வண்ண ஓவியங்களைச் சமூகக் கலைஞர்கள் தீட்டியுள்ளனர். சுகமான பயணத்தையும் சமூகப் பிணைப்பையும் ஊக்குவிக்கும் விதமாக அவை அமைந்துள்ளன.
சுவரோவியங்களில் ஒன்றைத் திரு லியோங் சிஜுன் வரைந்திருந்தார். 21 வயதான அந்த ஓவியக் கலைஞர் மனவளர்ச்சி குன்றியவர். கண்பார்வையும் தசை வலிமையும் படிப்படியாகக் குறையத் தொடங்கியபோதும் வரைவதை அவர் நிறுத்தவில்லை. தொடர்ந்து வரைந்து அவர் ஓவியத்தை உருவாக்கினார்.
போக்குவரத்து, கலாசார, இளையர் துறைத் துணையமைச்சரும் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு பே யாம் கெங், நல்வாழ்வுக் கிராமத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
எஸ்பிஎஸ் டிரான்சிட், அதன் எம்ஆர்டி கட்டமைப்பில் மேலும் அத்தகைய மூன்று கிராமங்களை அடுத்த 15 மாதங்களில் நிறுவும் என்று குழுமத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி சிம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
போக்குவரத்து முனையங்களை நவீன கிராமங்களாய் உருவாக்கலாம் என்ற யோசனை பிறந்ததாக அவர் சொன்னார். பயணங்களுக்கு இடையே மக்கள் ஒன்றுகூடி, தொடர்புகொண்டு, அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள அவை உதவும் என்றார் திரு ஜெஃப்ரி.

