தானியங்கி வாகனத் தொழில்நுட்ப நிறுவனமான ‘வீரைட்’, அதன் ஆகப் புதிய தானியங்கி வாகனங்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்துள்ளது. ஒவ்வொரு தானியங்கி வாகனத்திலும் ஐவர் அமர்ந்து பயணம் செய்யலாம்.
இந்த வாகனங்கள் அடுத்த சில மாதங்களில் பொங்கோல் வட்டாரத்துக்குள் இடைவழி வாகனங்களாகப் பயன்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
இவ்வாண்டின் நான்காவது காலாண்டின் தொடக்கத்துக்குள் சிங்கப்பூர் சாலைகளில் தானியங்கி வாகனங்கள் இயங்க வேண்டும் என்று அதிகாரிகள் இலக்கு கொண்டிருப்பதாக தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் ஜூன் மாதம் தெரிவித்திருந்தார்.
‘வீரைட்’ நிறுவனத்தின் தலைமையகம் சீனாவின் குவாங்சோவில் உள்ளது.
தனது புதிய தானியங்கி வாகனங்கள் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்படுவதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வாகனங்களில் ஒன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) ஜாலான் பாஹாரில் கனரக வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டது.
இந்த வகை தானியங்கி வாகனங்கள் ‘ஜிஎக்ஸ்ஆர்’ என அழைக்கப்படுகின்றன.
அவை பெய்ஜிங், அபு தாபி போன்ற நகரங்களில் தானியங்கி டாக்சிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை சீன வாகன நிறுவனமான ஜீலிக்குச் சொந்தமான ஃபரிசோன் பிரிவு உற்பத்தி செய்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
பொங்கோலில் தானியங்கி வாகனங்களை இடைவழி வாகனங்களாகப் பயன்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சில தானியங்கி வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் அது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவற்றில் ‘வீரைட்’டும் ஒன்று.
தென்கிழக்காசியாவில் தானியங்கி வாகனத் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஆராய்வது தொடர்பாகக் கடந்த மார்ச் மாதம் கிராப் நிறுவனத்தடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நான்கு நிறுவனங்களில் ‘வீரைட்’டும் அடங்கும்.
பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்கும் எஸ்எம்ஆர்டி 2022ஆம் ஆண்டில் ‘வீரைட்’ நிறுவனத்தில் முதலீடு செய்தது.
2026ஆம் ஆண்டின் தொடக்கத்துக்குள் சிங்கப்பூரில் உள்ள குடியிருப்புப் பேட்டைகளில் ஒன்றில் இடைவழிச் சேவை வழங்கும் தானியங்கி வாகனங்களை இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
அந்த வட்டாரம் தெங்காவாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

