வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியுடன் (மசெக) மூன்றாவது புதுமுகமான தொழிற்சங்கவாதி நட்டஷா சோய், களத்தில் காணப்பட்டுள்ளார்.
பிப்ரவரி நடுப்பகுதி முதல், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி எம்.பி. ஃபூ மீ ஹாருடன் சமூக நிகழ்ச்சிகளில் திருவாட்டி சோய் காணப்பட்டுள்ளார்.
2024 இறுதியிலிருந்து, நிகழ்ச்சிகளில் திருவாட்டி ஃபூவுடன் காணப்பட்ட மற்றொருவர், சிங்கப்பூருக்கும் தென்கிழக்காசியாவுக்குமான செம்ப்கார்ப்பின் நிறுவன விவகாரப் பிரிவுத் தலைவர் வெலரி லீ.
2011 முதல் வெஸ்ட் கோஸ்ட் எம்.பி.யாக இருந்துவரும் திருவாட்டி ஃபூ, “வெலரி, நட்டஷா இருவரும் வெஸ்ட் கோஸ்ட்டில் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்றி வருகின்றனர்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
ஆனால், இருவரும் மசெகவுக்கு உத்தேச வேட்பாளர்களா என்பது பற்றி திருவாட்டி ஃபூ கருத்துரைக்கவில்லை.
திருவாட்டி லீ, 39, வெவ்வேறு அமைப்புகளுடன் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டாற்றி வருவதாகக் கூறினார்.
இதற்கிடையே, தீவின் வடக்கே களத்தில் காணப்படும் மற்றொருவர் திருவாட்டி லீ ஹுய் யிங், 36. நீ சூன் குழுத்தொகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தொண்டாற்றி வருகிறார்.
ஜனவரியில் நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகத்துடன் அவர் காணப்பட்டார். மற்றொரு புதுமுகமான வழக்கறிஞர் டெரின் சிம்மும் அவர்களுடன் இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தொகுதி உலாக்களில் தமக்கு உதவிவரும் அவ்விருவரையும் திரு சண்முகம் செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
திரு சண்முகத்தின் சொங் பாங் தொகுதியில் மக்களைச் சந்திக்கும் நிகழ்வுகளிலும் திருவாட்டி லீ காணப்பட்டார்.
பொதுத் தேர்தலில் தாம் உத்தேச வேட்பாளராகக் களமிறங்குவது குறித்து திருவாட்டி லீ கருத்துரைக்கவில்லை. நீ சூனில் உள்ள அடித்தள அமைப்புகளுடன் தாம் தொண்டாற்றி வருவதாக மட்டும் அவர் சொன்னார்.