வரும் பொதுத் தேர்தலில், ஜூரோங் குழுத்தொகுதியிலிருந்து சில பேட்டைகள் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியுடன் சேர்க்கப்பட்டு, வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியாக பெயர் மாற்றம் பெறும்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் முன்பிருந்த ஹார்பர்ஃபிரண்ட் மற்றும் செந்தோசா பேட்டைகள், ராடின் மாஸ் தனித்தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளன என்று தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு (இபிஆர்சி) மார்ச் 11ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட புதிய வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் 158,581 வாக்காளர்கள் உள்ளனர்.
2020 பொதுத் தேர்தலில் களம் கண்ட வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் 144,516 வாக்காளர்கள் இருந்தனர். அதில் மக்கள் செயல் கட்சியை (மசெக) எதிர்த்து போட்டியிட்டது முன்னாள் மக்கள் செயல் கட்சி உறுப்பினர் டாக்டர் டான் செங் போக் தலைமையிலான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி. அதில் மசெக 51.69% வாக்குகள் பெற்று வென்றது.
தேர்தல் தொகுதி மறுஆய்வுக் குழு அறிக்கை மார்ச் 7ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது அரசாங்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இபிஆர்சி குழு விளக்கமளித்தது.
தெங்கா, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் ஆகிய பகுதிகளில் உருவாகியுள்ள புதிய பேட்டைகளால், பழைய வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மேலும் விரிவடைந்ததால், தேர்தல் தொகுதி எல்லையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியிருந்தது.
இந்தப் பகுதிகளில் மக்கள்தொகை வளர்ச்சியால், தற்போதைய எல்லைக்குள் அதை கொண்டு வர முடியாது எனும் நிலை ஏற்பட்டது. ஏனெனில், முந்தைய தேர்தலிலிருந்து வாக்காளர்கள் மற்றும் எம்.பி.க்களின் விகிதத்தை பெரும்பாலும் மாறாமல் வைத்திருக்கும் பொறுப்பு இபிஆர்சி குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த எண்ணிக்கை முந்தைய தேர்தலுக்கு 28,510 ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
எனவே, அந்தப் பகுதியில் உள்ள பல தொகுதிகளை மறுவரையறை செய்து, புதிய ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது.
புதிய வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில், டாக்டர் டான் செங் போக் தலைமையிலான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. அக்குழுவில் 84 வயதான டாக்டர் டான் வேட்பாளராக நீடிக்கவும் வாய்ப்புள்ளது.
பிப்ரவரியில் நடந்த தொகுதிச் சுற்றுலாவின்போது அவர், தேர்தலுக்கு முன்பு வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் எல்லைகள் மாறும் என்று தமது கட்சி எதிர்பார்ப்பதாகவும், ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அந்தக் குழுத் தொகுதியில் போட்டியிடும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.