வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் நிலைமை சீராக உள்ளது: டெஸ்மண்ட் லீ

2 mins read
56f3447a-b869-4d4d-9ec6-4c7a340f95c6
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தாமும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூடுதலாகச் செயல்பட்டதாகக் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிட நிலைமை சீராக இருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லாததால் சேவையில் இடைவெளி இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்ய அந்தக் குழுத்தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுதலாகச் செயலாற்றியதாக அவர் சொன்னார்.

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஊழல் தொடர்பில் விசாரிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி ஓராண்டுக்குமேல் ஆன நிலையில், அந்தக் குழுத்தொகுதியில் நிலவரம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு அமைச்சர் லீ பதிலளித்தார்.

ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்ற ஊடக நேர்காணலில் அவர் பங்கேற்றார்.

அந்தக் குழுத்தொகுதியில் வெஸ்ட் கோஸ்ட் பகுதிக்குப் பொறுப்பேற்றிருந்தார் ஈஸ்வரன். அதே குழுத்தொகுதியில் பூன் லே பகுதிக்குப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார் அமைச்சர் லீ.

“துரதிர்ஷ்டவசமாக திரு ஈஸ்வரன் மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்தச் சூழலைக் கையாள நேரிட்டது. நம்மிடம் எதிர்பார்க்கப்படும் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையின் அளவையும் இது காட்டுகிறது,” என்றார் அவர்.

“தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. நடந்தது குறித்துக் கவலைப்பட்ட மக்கள், அந்த நடைமுறை இயல்பான முடிவை எட்டியதை அறிந்துகொண்டார்கள் என்றார் திரு லீ.

தாமும், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு ஆங் வெய் நெங், திருவாட்டி ஃபூ மீ ஹர், திருவாட்டி ரேச்சல் ஓங் ஆகியோரும் குடியிருப்பாளர்களின் தேவைகளை ஈடுகட்ட கூடுதலாகச் செயல்பட்டதாகக் கூறினார்.

அரசாங்க ஊழியர் என்ற நிலையில் விலையுயர்ந்த பொருள்களைப் பெற்றுக்கொண்டது, நீதித்துறை அதன் கடமையைச் செய்வதற்குத் தடையாக விளங்கியது ஆகியவை தொடர்பில் சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, கடந்த அக்டோபர் மாதம் ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்