புக்கிட் பாத்தோக்கில் இருக்கும் ‘வெஸ்ட் மால்’ கடைத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதுப்பிப்புப் பணிகள் 2025ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1998ல் திறக்கப்பட்ட வெஸ்ட் மால் கடைத்தொகுதியில் உள்ள புக்கிட் பாத்தோக் பொது நூலகம் புதுப்பிப்புக்காக டிசம்பர் 31ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என்று தேசிய நூலக வாரியம் திங்கட்கிழமை அறிவித்தது.
தற்போது இருக்கும் அதன் அளவைவிட ஒரு மடங்கு அதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
“கடைத்தொகுதியின் மூன்றாவது தளத்தில் இயங்கும் நூலகத்திற்கு வருபவர்களுக்கு இன்னும் சிறந்த அனுபவத்தைக் கொடுக்க நூலகம் புதுப்பிக்கப்படவுள்ளது. அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிகமான இடவசதி வேண்டும் என்பதால் நூலகத்தின் அளவு விரிவுபடுத்தப்படவுள்ளது,” என வாரியம் கூறியது.
“இவ்வாண்டின் முற்பாதியில் தொடங்கப்பட்ட புதுப்பிப்புப் பணிகள் 2025ல் நிறைவடைவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு அடுத்துள்ள கடைத்தொகுதி முழுமையாகச் செயல்படும் எனவும் மேம்பாட்டுப் பணி கட்டங்கட்டமாக நடைபெறும் எனவும் ‘வெஸ்ட் மால்’ கடைத்தொகுதி உரிமையாளர் சிங்கப்பூர் லேண்ட் குரூப் திங்கட்கிழமை கூறியது.

