சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றும்விதமாக லியன் சியன் தாவோயிஸ்ட் அமைப்பின் (Lian Xian Taoist Association) சீனக் கோவிலுக்குள் அமைந்திருக்கும் புதிய இந்துக் கோயிலின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) நடைபெற்றது.
வெஸ்ட் மாரியம்மன் கோயில் என்று பெயரிடப்பட்ட இந்தக் கோயில், 7 சூன் லீ ஸ்திரீட்டில் ஐஸ்பேஸ் கட்டடத்தின் மேல்தளத்தில் அமைந்துள்ளது. சீனக் கோவிலுக்குள் சுமார் 18 ஆண்டுகளாக சிறிய இடத்தில் இந்து வழிபாடு நடைபெற்று வந்த நிலையில், அந்த இடம் விரிவுபடுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடங்கள் பல இருக்கும் பகுதியான பைனியரில் (Pioneer) அமைந்துள்ள இக்கோயிலின் விரிவாக்கம், அவர்கள் வழிபாடு செய்வதற்கு வசதியாக அமைந்துள்ளது.
முன்னதாக, சீனக் கோவிலுக்குள்ளிருந்த இந்துப் பிரார்த்தனை இடம் விநாயகர், மாரியம்மன் சன்னதிகளை மட்டும் கொண்டிருந்தது. இப்போது முருகர், பைரவர், ஆஞ்சநேயர், கருப்பசாமி போன்ற தெய்வங்களின் சன்னதிகள் விரிவாக்கப்பட்ட இடத்தில் உள்ளன.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது சீனக் கோவிலுக்கு சென்றிருந்த ஏஞ்சல்ஸ் சிட்டி பிஸ்ட்ரோ மற்றும் உணவகத்தின் உரிமையாளரான டேவிட் செல்வராஜூ, 59, அந்த இடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று உத்வேகம் பெற்றதாகச் சொன்னார். சீனக் கோவிலின் தலைவரான அலெக்ஸ் சூ மீஹுவாவுடன் திரு டேவிட் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டார்.
“நாம் அனைவரும் ஒரு குடும்பம், நல்லிணக்க அடிப்படையில் பல்வேறு சமூகங்கள் எவ்வாறு அமைதியாகவும் மரியாதையுடனும் இணைந்து வாழ முடியும் என்பதை இந்தக் கூட்டுமுயற்சி வெளிப்படுத்துகிறது,” என்று திரு அலெக்ஸ் கூறினார்.
“இந்தக் கூட்டுமுயற்சி, வழிபாட்டுத் தலத்தை விரிவுபடுத்தும் நோக்கம் மட்டுமல்லாமல், வெவ்வேறு சமூகங்களுக்கிடையே தொடர்புகளை உருவாக்குவதிலும் பெரிய பங்கு வகித்துள்ளது. வெளிநாட்டு ஊழியர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியில் அவர்களின் பங்கு இன்றியமையாதது,” என்றார் திரு டேவிட்.
சீனக் கோயிலின் பிரதிநிதிகளும் இந்துக் கோயிலின் பிரதிநிதிகளும் சேர்ந்து நிர்வகிக்கும் பொது நிதியிலிருந்து பங்களிப்புகள் வந்ததாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, அவர்கள் தெய்வ வழிபாட்டிற்காக லிட்டில் இந்தியா போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் இப்போது கோவிலின் அருகாமையும் அது இயங்கும் நேரமும் மிகவும் வசதியாக இருப்பதாக சொன்னார் கடந்த 15 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர் முத்துபிரபு.
சுமார் 300 பேர் கலந்துகொண்ட குடகுழுக்கு விழாவில் பாரம்பரிய இந்து பிரார்த்தனைகள், சிங்கம், கடல்நாக நடனங்கள் இடம்பெற்றன. மேலும், இதில் இந்தியர்களுடன் சீனர்களும் கலந்துகொண்டு இந்துக் கோயிலின் அர்ச்சகரிடமிருந்தும் சீனக் கோவிலின் சமயத் தலைவரிடமிருந்தும் நல்வாழ்த்துகளைப் பெற்றனர்.
இதில் கலந்துகொண்டவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது.

