சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் வாம்போ லோரோங் லீமா வசிப்போர் கட்டமைப்பு, வாம்போ ராஜா கோர்ட் கட்டமைப்பு, வாம்போ நற்பணிப் பேரவை ஆகியவை இணைந்து 400 வண்ணமயமான காற்றாடிகளைப் பயன்படுத்தி ‘SG60’ என்ற வடிவத்தை உருவாக்கி சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளன.
வாம்போ பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற்ற அந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பல்லின மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று 10 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்ட பரப்பில், காற்றாடிகளில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் வாழ்த்துகளை எழுதினர்.
வாம்போ ராஜா கோர்ட் வசிப்போர் கட்டமைப்பின் தலைவர் டெக் பூன், “இந்தச் சாதனையை வாம்போ குடியிருப்பாளர்களும் மூன்று சமூக அமைப்புகளும் இணைந்து படைத்தது மிகவும் அர்த்தமுள்ளது. இது நமது ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது,” என்றார்.
“சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற விரும்பும் பல இளையர்களையும் மூத்தோரையும் இந்த நிகழ்வில் கண்டேன். இந்தத் திட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் சமூகப் பிணைப்பையும் ஈடுபாட்டையும் காண முடிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் வாம்போ நற்பணிப் பேரவைத் தலைவர் ராஜசேகர்.
“இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தைச் சாதாரண நிகழ்ச்சியாக இல்லாமல் சாதனையாக செய்யவேண்டும் என்று திட்டமிட்டேன். இந்தச் சாதனை நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 75 நாள்கள் கடினமாக உழைத்தோம்,” என்றார் நிகழ்ச்சி இயக்குநர் மில்லத் அகமது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களான வாம்போ சமூக மன்ற நிர்வாகக் குழுத் தலைவர் சியா செங் கீயும் சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தின் நடுவர் பிரான்சிஸ் டானும் சமூக அடித்தளத் தலைவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியிருப்பாளர்களுக்கு அன்பளிப்புப் பைகளும் நண்பகல் உணவும் வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டிகள், சிங்கப்பூர் பற்றிய வினாடி வினா, அதிர்ஷ்டக் குலுக்கல் அங்கங்களும் இடம்பெற்றன.