கொவிட்-19 தொற்று அதிகரிப்பு: நம்மைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை

2 mins read
e7cad3ad-ca40-4769-b406-67756a766b07
கொவிட்-19 கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் வெளியிடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்வதும் பாதுகாப்பு நடவடிக்கைளில் அடங்கும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அண்மையில் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஏப்ரல் 27 முதல் மே 3 வரையிலான ஒருவார காலத்தில் 14,200 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சும் தொற்றுநோய்கள் அமைப்பும் மே 13ஆம் தேதி தெரிவித்திருந்தன. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 11,100ஆக இருந்தது.

கொவிட்-19 பாதிப்புகள் இப்போது ஏன் அதிகம்?

தற்போதைய கொவிட்-19 தொற்று அதிகரிப்புக்கான காரணங்களில், மக்களிடையே நோயெதிர்ப்பாற்றல் குறைந்து வருவதும் ஒன்று என சுகாதார அமைச்சும் தொற்றுநோய்கள் அமைப்பும் கூறின.

பல காலமாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரிடம் நோயெதிர்ப்பாற்றல் குறைந்து வருவது இதற்குக் காரணமாக இருக்கலாம் என ரோஃபி மருந்தகத்தின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் லியோங் ஹோ நாம் சொன்னார்.

தற்போது கொவிட்-19 நிரந்தர நோயாகக் கருதப்படுவதால், தொற்றைத் தவிர்க்க எப்படி முன்னெச்சரிகையாக இருக்கலாம்?

பெருந்தொற்றின் கடுமையான கட்டத்தை கடந்துவிட்ட சிங்கப்பூரில் 2023 தொடக்கத்தில் எஞ்சிய கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில், தொற்று மீண்டும் அதிகரிக்கும்போது முன்னெசரிக்கையுடன் இருக்கத் தேவையில்லை என்பதன்று. முதியோரும் சுகாதாரப் பிரச்சினை உடைய இளம் வயதினரும் தங்களை கொவிட்-19 தொற்றும் அபாயத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளித் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங் அறிவுறுத்தினார்.

“கொவிட்-19 கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் வெளியிடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்வதும் பாதுகாப்பு நடவடிக்கைளில் அடங்கும்,” என்றார் அவர்.

புதுப்பிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?

காலப்போக்கில் கொரோனா கிருமியின் தன்மை மாறுவதால் அனைவரும், குறிப்பாக முதியோரும் குறைவான நோயெதிர்ப்பாற்றல் உடையோரும் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் லியோங் பரிந்துரைத்தார்.

கொவிட்-19 லேசாகி வருகிறதா?

தொற்று லேசாகி வருவதாக சிலர் கூறினாலும், உண்மை அப்படியன்று என டாக்டர் லியோங் கருத்துரைத்தார். மாறாக, முன்பு தடுப்பூசி போட்டுக்கொண்டதாலும் தொற்றுக்கு ஆளானதாலும் மீண்டும் கொவிட்-19 தொற்றும்போது கடுமையான உடல்நலப் பிரச்சினையிலிருந்து பாதுகாக்கப்படலாம் என அவர் கருதினார்.

குறிப்புச் சொற்கள்