எட்டு விழுக்காடாக உயரும் ஜிஎஸ்டி; 2023ல் சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கவிருக்கும் உதவிகள்

எட்டு விழுக்காடாக உயரும் ஜிஎஸ்டி; 2023ல் சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கவிருக்கும் உதவிகள்

2 mins read
cef97b66-a89a-4404-829a-cd2faf358567
-

இப்போது ஏழு விழுக்காடாக இருக்கும் பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 2023 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து எட்டு விழுக்காடாகவும் 2024ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ஒன்பது விழுக்காடாகவும் உயர்த்தப்படவுள்ளது.

இதன்மூலம் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் வரி வருவாயாக $3.5 பில்லியன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கத்தைத் தணிப்பதற்காக அரசாங்கம் $8 பில்லியன் மதிப்பிலான உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.

இதன்மூலம் ஜிஎஸ்டி உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகளை பெரும்பாலான குடும்பங்கள் குறைந்தது ஐந்தாண்டுகளும் குறைந்த வருமானக் குடும்பங்கள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளும் ஈடுகட்ட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் குடும்பங்கள், அரசாங்கத்திடம் இருந்து கீழ்க்காணும் உதவிகளை எதிர்பார்க்கலாம்.

சிடிசி பற்றுச்சீட்டுகள்: 2023 ஜனவரி மாதம் எல்லா சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் $300 சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் கிடைக்கும். அதாவது, ஜிஎஸ்டிக்கான உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் $200 சிடிசி பற்றுச்சீட்டுகளும் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட $1.5 பில்லியன் ஆதரவுத் திட்டத்தின்கீழ் $100 சிடிசி பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும்.

பொதுப் போக்குவரத்து மானியங்கள்: எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பயணக் கட்டண மறுஆய்வு நடவடிக்கைகளின்போது இடம்பெறும் 10.6 விழுக்காட்டுப் புள்ளி கட்டண உயர்வைச் சமாளிப்பதற்காக 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட $200 மில்லியன் கூடுதல் மானியம் வழங்கப்படும்.

பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள்: தலைக்கணக்கு மாத வருமானம் $1,600க்கு மிகாத குடும்பங்களுக்கு $30 மதிப்பிலான பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். இதன்மூலம் 600,000 குடும்பங்கள் பயன்பெறும்.

கல்வி அமைச்சின் நிதியுதவித் திட்டங்கள்: 2023 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து, உணவு மானியங்களைக் கல்வி அமைச்சு உயர்த்தவிருக்கிறது. தொடக்கப் பள்ளி முதல் பட்டக்கல்வி பயிலும் மாணவர்கள் வரை உதவிபெறுவதற்கான வருமானத் தகுதி வரம்புகளும் உயர்த்தப்படவுள்ளன. பல்கலைக்கழக புகுமுக வகுப்பு மாணவர்களுக்கும் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை உயர்த்தப் படவிருக்கிறது. இத்தகைய மேம்பாடுகளால் ஏறத்தாழ 135,500 மாணவர்கள் பயனடைவர்.

ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு - ரொக்கம் (மூத்தோருக்கான ஊக்கத்தொகை) மற்றும் மெடிசேவ்: 55 மற்றும் அதற்குமேல் வயதுடைய தகுதியுள்ள குறைந்த வருமான மூத்த சிங்கப்பூரர்களுக்கு 'ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு - ரொக்கம் (மூத்தோருக்கான ஊக்கத்தொகை)' திட்டத்தின்கீழ் 2023 பிப்ரவரி மாதம் $300 வரை கிடைக்கும். 20 மற்றும் அதற்கும்கீழ் வயதுடைய குழந்தைகளுக்கு அவரது மத்திய சேமநிதி மெடிசேவ் கணக்கில் $150 நிரப்பப்படும்.

கூடுதல் யு-சேவ் பற்றுச்சீட்டு: பயனீட்டுக் கட்டணங்களை ஈடுசெய்யும் விதமாக தகுதியுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வரும் ஜனவரி மாதம் $95 வரை கூடுதல் யு-சேவ் பற்றுச்சீட்டுகள் கிடைக்கும். வழக்கமாக வழங்கப்படும் $95 வரையிலான யு-சேவ் பற்றுச்சீட்டுகளுக்கும் மேலாக இந்தக் கூடுதல் பற்றுச்சீட்டுகள் கிடைக்கும்.

உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்திற்கும் உதவுவோம் என்று துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.