மூப்படைவது என்பது தனிமனிதர்கள், அரசாங்கங்கள், ஒட்டுமொத்த சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய ஓர் உலகளாவிய, பல பரிமாணம் கொண்ட விவகாரம் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
வரும் 2050க்குள் ஆசிய பசிபிக் பகுதி மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசியினர் 60 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அது ஊழியர் சந்தை, சுகாதார அமைப்புகள், சமூக ஆதரவுக் கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி குறிப்பிட்டார்.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூரர்களுக்கும் மூத்தோருக்கும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் நம்பிக்கை அளித்தார்.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) தொடங்கிய உலக மூப்படைதல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இந்திராணி உரையாற்றினார்.
17வது முறையாக நடைபெற்ற இந்த இரு நாள் விழாவின் முதல் நாளில் குமாரி இந்திராணி பங்கேற்றார்.
மூப்படைதல் சார்ந்த சவால்களைக் கையாள அரசாங்கம் ஆயுட்காலத்தில் கவனம் செலுத்துவதைவிட ஆரோக்கியமான ஆயுட்காலத்தில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்த அமைச்சர், நீண்ட ஆயுள், சமூகத்திற்கு மூத்தோர் பங்களிக்க வழிகள், மூத்தோருக்கான நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்படுவதாகச் சொன்னார்.
“நாம் மூப்படைந்து வரும் மக்கள்தொகைக்காக அல்ல, மாறாக ஒரு நீடித்த ஆயுள் கொண்ட சமூகத்திற்காக நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வி, வேலை, ஓய்வு என்ற வழக்கமான மூன்று கட்ட வாழ்க்கைமுறை இனி பொருந்தாமல் போகலாம் என்பதே இதன் பொருள்,” என்றார் அவர்.
தனிமனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வேலையில் சேருவதும் விலகுவதுமாக பல மாற்றங்களைக் கடந்து செல்லும்போது, அவர்களுக்கு உதவும் வகையில் வேலை, சமூகம், ஆதரவு அமைப்புகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குமாரி இந்திராணி வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
விழாவின் மற்றோர் அங்கமாக, மக்கள்தொகை மூப்படைந்து வரும் நிலையில் பொருளியல்கள், சமூகங்கள் தொடர்ந்து செழிக்கத் தேவையான பொருளியல், சமூக மாற்றங்களில் கவனம் செலுத்தும் ‘நீண்ட ஆயுள் சமூகங்கள், பொருளியல்’ கழகத்தைச் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. குமாரி இந்திராணி அதை தொடங்கிவைத்தார்.
இந்தக் கழகம் நீண்ட ஆயுள், சுகாதாரம், பராமரிப்புக் கண்ணோட்டங்களிலிருந்தும் ஊழியர் உற்பத்தித்திறன், அர்த்தமுள்ள ஈடுபாடு, பொருளியல் தாக்கம் ஆகிய கோணங்களிலும் ஆராய முற்படும்.
கழகத்தை அமைத்து, நிலைநிறுத்துவதற்கு உதவும் வகையில், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் $10 மில்லியன் வழங்க உறுதியளித்துள்ளது. அத்துடன், கூடுதல் வெளிப்புற ஆதரவைப் பெறுவதற்கான திட்டங்களையும் அது கொண்டுள்ளது.
கழகத்தின் அறிமுகத்தைப் பாராட்டிய குமாரி இந்திராணி, மக்கள் நீண்டநாள் வாழும்போது, ஒட்டுமொத்த சமூகமும் எவ்வாறு பரிணமிக்க வேண்டும் என்ற கேள்வியைக் கழகம் எழுப்புவதாகக் குறிப்பிட்டார்.
“மூப்படைதலை வாழ்க்கையின் ஒரு கட்டமாகப் பார்ப்பதிலிருந்து, நீண்ட ஆயுளை ஒரு கட்டமைப்பு மாற்றமாகப் பார்க்கும் முக்கியமான கவன மாற்றத்தை கழகம் பிரதிபலிக்கிறது. இந்த மாற்றம் சமூகத்தை ஆழமாக மாற்றியமைப்பதுடன் அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும் வழங்கும்,” என்று அமைச்சர் இந்திராணி தெரிவித்தார்.
சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கம், தொழில்துறைகளுடனான தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில், அரசு, சமூகம், தனியார் துறைகளைச் சேர்ந்த ஐந்து முக்கியப் பங்குதாரர்களுடன் கூட்டாண்மையைக் கழகம் ஏற்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, லயன்ஸ் பிஃபிரெண்டர்ஸ், சிங்லைஃப், செயின்ட் லியுக்ஸ் முதியோர் பராமரிப்பு நிலையம், சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு ஆகியவற்றுடன் அது ஒத்துழைக்கும்.

