‘உங்கள் முடிவு’ என ரயீசா கானிடம் கூறியது பற்றி பிரித்தம் சிங் விளக்கம்

2 mins read
59c028a1-3985-42c4-b0c8-4497be81ba30
பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் புதன்கிழமை (நவம்பர் 6) விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வருகிறார். - படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2021 நவம்பர் 29ஆம் தேதி பாட்டாளிக் கட்சியின் ஒழுங்குமுறை குழுவினருடன் இணைந்து திருவாட்டி ரயீசா கானிடம் பேசியபோது, “இது உங்கள் முடிவு” என அவரிடம் கூறியதற்கான பொருளை பிரித்தம் சிங் அரசு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6) விளக்கினார்.

அந்தச் சந்திப்புக்கான குறிப்புகளில் இடம்பெற்ற திரு சிங்கின் இந்த வார்த்தைகள், 2021 டிசம்பரில் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் அமர்வுகளின்போது ஆராயப்பட்டன.

அந்தக் குறிப்புகளின்படி திரு சிங், “அக்டோபர் (நாடாளுமன்ற) அமர்வுக்கு முன் உங்களைச் சந்தித்தேன். இது உங்கள் முடிவு என்று கூறினேன். நாடாளுமன்றத்தில் உண்மையைச் சொல்வதற்கான யோசனை உங்களுக்கு ஏற்பட்டதா?” என்று திருவாட்டி கானிடம் தெரிவித்தார்.

2021 அக்டோபர் 3ல் திருவாட்டி கானை அவரது வீட்டில் சந்தித்தபோது, பொய்யுரைத்த விவகாரம் மீண்டும் தலைதூக்கினால் அதற்குப் பொறுப்பேற்கும்படி கூறியதை நினைவுபடுத்தவே நவம்பர் 29ஆம் தேதி சந்திப்பின்போது இவ்வாறு கூறியதாகச் சொன்னார் திரு சிங்.

பதினோராவது நாளாக நடைபெறும் இந்த வழக்கு விசாரணையில் தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமபோயின் கேள்விகளுக்கு திரு சிங் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார்.

அக்டோபர் 3ன் வீட்டுச் சந்திப்பின்போது “‘உங்கள் முடிவு’ என்ற தொடரைப் புழங்கினீரா,” என்று திரு ஜுமாபோய் கேட்க திரு சிங், இல்லை எனப் பதிலளித்தார்.

திருவாட்டி கான் பொய்யைத் தொடரவேண்டும் என்பதைப் பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் எவரும் பூடகமாகவும் சொல்லவில்லை என்றும் திரு சிங் கூறினார்.

திருவாட்டி கான் மீதான எதிர்மறையான உணர்வுகளையும் நாடாளுமன்றத்தில் அவர் செய்ததையும் பார்க்கும்போது அவர் பதவி விலகல் பற்றிய கலந்துரையாடலை ஒழுங்குமுறைக் குழு மேற்கொண்டதாக திரு சிங் கூறினார்.

தமது அணியினரின் ஆதரவில்லாத நிலையில் பதவி விலகல் குறித்து திருவாட்டி கான் யோசிக்க வேண்டும் என்றார் திரு சிங்.

அதிர்ச்சிக்குப் பிந்திய மன அழுத்தத்தாலும் உளவியல் ரீதியான ஆளுமைச் சிதைவாலும் (dissociation) பாதிக்கப்பட்டதால், திருவாட்டி கான் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட முடியுமா என்பது குறித்த கவலை இருந்ததாகவும் திரு சிங் கூறினார்.

“இந்த விவகாரங்கள் எழுப்பப்பட்டன. ஆயினும், பதவி விலகியே ஆக வேண்டும் என்பது அவருக்குச் சொல்லப்படவில்லை. இறுதியில் அந்த முடிவை அவர்தான் எடுக்கவேண்டும். கட்சியிலிருந்து அவரை நீக்கும் முடிவு அதன் மத்திய செயற்குழுவில் இருந்துதான் வரவேண்டும்,” என்று அவர் கூறினார்.

முடிவில், திருவாட்டி கான், நவம்பர் 3ஆம் தேதி பதவி விலகினார்.

தற்காப்புத் தரப்பின் விசாரணக்குப் பிறகு திரு சிங்கை அரசு தரப்பு விசாரிக்கத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்