தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிஜக சொல்வது சத்தமல்ல, அவை சிங்கப்பூரர்களின் குமுறல்கள்: சீ சூன் ஜுவான்

3 mins read
1640e96d-cfc2-4bae-9ffa-22c984244e72
பிரசாரக் கூட்டங்களின் கடைசி நாளான வியாழக்கிழமை (மே 1) எவர்கிரீன் தொடக்கப்பள்ளியில் இடம்பெற்ற சிஜகவின் பிரசாரத்தில் டாக்டர் சீ சூன் ஜுவான் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்கள் செயல் கட்சி (மசெக) தம்மை பலமுறை இழிவாகப் பேசியிருந்தாலும் சிங்கப்பூருக்காக தாம் எப்போதும் நிற்கத் தயார் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிஜக) தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் உறுதியளித்துள்ளார்.

பிரசாரக் கூட்டங்களின் கடைசி நாளான வியாழக்கிழமை (மே 1) எவர்கிரீன் தொடக்கப்பள்ளியில் இடம்பெற்ற சிஜகவின் பிரசாரத்தில் டாக்டர் சீ பேசினார்.

மே தினப் பொது விடுமுறை நாளான வியாழக்கிழமையன்று மக்கள் பிரசாரத்தைக் காண சிவப்பு உடைகளில் வெள்ளமென திரண்டிருந்தனர்.

அரசியலில் தாம் சந்தித்த சவால்கள் பற்றி பேசிய டாக்டர் சீ, 1994ல் தாம் முதல்முறையாக எழுதிய புத்தகத்தை வெளியிட்டபோது மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அதை ஏளனமாகப் பார்த்ததாகச் சொன்னார்.

“மசெக என்னை ஒரு பொய்க்காரன், மனநிலை திரிந்தவன், என்றெல்லாம் ஏளனமாகப் பேசியுள்ளது. நான் பலமுறை சிறைக்குச் சென்றதால் என்னால் 2006, 2011 பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாமல் போனது. இருந்தாலும், சிஜகவின் கொடியை உயர பறக்கவிட்டேன்,” என்றார் டாக்டர் சீ.

இத்தனை சவால்களுக்கு நெடுகிலும் தமது மனைவியும் பிள்ளைகளும் தம்முடன் கூடவே நின்று ஆதரவளித்து வந்ததை நினைவுகூர்ந்த டாக்டர் சீ, தம் பிள்ளைகள் தற்போது அவரவர் பொறுப்புகளில் இருப்பதாகவும் தாம் அவர்களை பெரிதும் எண்ணி ஏங்குவதாகவும் உணர்ச்சிபொங்கச் சொன்னார்.

செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் தமக்கு எதிராகப் போட்டியிடும் மசெகவின் போ லி சான் பற்றிக் குறிப்பிட்ட டாக்டர் சீ, சிஜக சொல்வதெல்லாம் ‘வெறும் சத்தம் மட்டுமே’ என்று திருவாட்டி போ சொன்னதைச் சுட்டினார். அப்போது மக்கள் ஆரவாரத்தோடு கோஷமிட்டனர்.

“நாம் சொல்வது வெறும் சத்தமன்று. இவைதான் சிங்கப்பூரர்களின் குமுறல்கள்,” என்றார் டாக்டர் சீ.

பிரசாரக் கூட்டங்களில் பேசுவது தமக்குச் சோர்வு அளித்திருந்தாலும் தாம் வெற்றியுடன் நிற்பதாக ஆணித்தரமாகக் கூறினார் டாக்டர் சீ.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங் மிக வலிமையான எதிர்க்கட்சி வெற்றி பெறக்கூடாது என்று கூறியதை தமது உரையில் குறிப்பிட்ட சிஜக தலைவர் பால் தம்பையா, சிஜக வெற்றி கண்டால் தற்போதைய அரசாங்கத்தைவிட அது இன்னும் திறம்படச் செயலாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஓங்குக்கு ஒருவேளையாக சிஜகவின் சுகாதாரக் கொள்கை என்னவென்று புரிந்துவிட்டதை தமது உரையில் கிண்டலான தொனியில் குறிப்பிட்ட டாக்டர் தம்பையா, சிஜகவின் திட்டங்கள் நிலையானவை என்றார்.

“மசெக சார்பில் செங்காங் குழுத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான லாம் பின் மின், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுகாதாரக் கொள்கைகள் குறித்து விவாதித்தார். அதுபோல நாங்களும் விவாதிக்க விரும்புகிறோம்,” என்று டாக்டர் தம்பையா சொன்னார்.

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் தமக்கு எதிராகப் போட்டியிடும் மசெகவின் லியாங் எங் ஹுவா அண்மையில் தமது பிரசாரத்தில் கூறிய சில தகவல்கள் தவறு என்ற டாக்டர் தம்பையா, முன்பு ஒரு விவகாரத்திற்கு நகர மன்றம் தமக்கு உதவாமல் போனதைச் சுட்டினார்.

சிஜக வெற்றி பெற்றால் சமூகத் திட்டங்கள் இல்லாமலேயே தாம் குடியிருப்பாளர்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் டாக்டர் தம்பையா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்