அண்மையில், பாத்தாம் தீவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்களிடம் சில இந்தோனீசியக் குடிநுழைவு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சில விசாரணைகளும் தொடங்கின.
இந்நிலையில், சிங்கப்பூர் பயணிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் கேட்கும் சம்பவங்கள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் இங்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.
புகார் சமர்ப்பிப்பது
இந்தோனீசியக் குடிநுழைவு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது போன்ற சட்டவிரோதமான செயல்களைச் செய்தால் பயணிகள் அந்நாட்டின் குடிநுழைவு இயக்குநரிடம் புகார் கொடுக்கலாம். புகார் அளிக்கும் தளங்கள்
மின்னஞ்சல்: pengaduan@imigrasi.go.id
வாட்ஸ்ஆப் : +62 813 9967 9966
இணையத்தளம்: www.imigrasi.go.id
இணையத்தளப் படிவம்: https://complaint.imigrasi.go.id/
இதில் பெரும்பாலானவை அலுவலக நேரங்களில் துடிப்புடன் செயல்படக்கூடியவை.
தொடர்புடைய செய்திகள்
பாத்தாம் செண்டர் அனைத்துலகப் படகு முனையத்தில் உள்ள குடிநுழைவு வாயிலில் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்ற அறிவிப்புகளும் ஒட்டப்பட்டிருக்கும்.
பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைக் கண்காணிக்கும் கண்காணிப்பு கேமராக்களும் அங்கு உள்ளன.
பயணிகள் புகார் அளிக்க ஏதுவாக பாத்தாம் சோதனைச் சாவடிகளில் ‘கியூஆர்’ குறியீடுகளும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வருடி பயணிகள் புகார் அளிக்கலாம்.
புகார் அளிக்கும்போது நேரம், இடம், அதிகாரியின் பெயர், பதவி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். அவை விசாரணைக்கு உதவும்.
பணம் கேட்டால் செய்ய வேண்டியவை
பாத்தாம் செல்லும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு விசா தேவையில்லை. அதனால் அவர்கள் குடிநுழைவில் விசா சார்ந்த கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம்.
இருப்பினும் அதிகாரிகள் யாரேனும் பணம் கேட்டால், பயணிகள் அவர்களிடம் அதிகாரபூர்வ ரசீது கேட்கலாம்.
பயணிகள் சம்பவ இடத்தில் பொறுமையாக இருந்து உயர் அதிகாரிகளை நாடலாம். குரலை உயர்த்திப் பேசுவது, கோபப்படுவதைத் தவிர்க்கலாம்.
சரியான பதில் கிடைக்கும் வரை பணம் ஏதும் செலுத்த வேண்டாம்.
பாத்தாமில் உதவி
பாத்தாமில் சிங்கப்பூரின் துணைத் தூதரகம் உள்ளது. உள்ளூர் அதிகாரிகள் சிக்கல்கள் கொடுத்தால் சிங்கப்பூரர்கள் தூதரகத்தின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
தொலைபேசி எண்: +62 778 372 0000 (அலுவலக நேரம்)
அவசர உதவி எண்: +62 811 7049 084 (அலுவலக நேரத்திற்குப் பிறகு)
மின்னஞ்சல்: singcon_bth@mfa.sg

