வாட்ஸ்அப் கணக்கு மோசடிகள்: பொதுமக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை

வாட்ஸ்அப் கணக்கு மோசடிகள்: பொதுமக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை

2 mins read
153a4db5-09b1-455a-b94d-2d59efae7b89
வியாழக்கிழமையன்று (மார்ச் 12) வெளியிடப்பட்ட இந்த ஆலோசனையில், மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவர்களின் கைப்பேசி எண்களைப் பயன்படுத்தி அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகளில் நுழைய முயல்வதாகவும் அதற்கான ஒருமுறை மறைச்சொல் கோரிக்கையை அனுப்புவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வாட்ஸ்அப் கணக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய வகை மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.

வியாழக்கிழமையன்று (மார்ச் 12) வெளியிடப்பட்ட இந்த ஆலோசனையில், மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவர்களின் கைப்பேசி எண்களைப் பயன்படுத்தி அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகளில் நுழைய முயல்வதாகவும் அதற்கான ஒருமுறை மறைச்சொல் கோரிக்கையை அனுப்புவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த ஒருமுறை மறைச்சொல் அடங்கிய குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும். அதே சமயம், ஏற்கெனவே ஊடுருவப்பட்ட நண்பர்கள் அல்லது உறவினர்களின் வாட்ஸ்அப் கணக்குகளில் இருந்து இவர்களுக்கு தகவல் அனுப்பிவைக்கப்படும்.

ஒருமுறை மறைச்சொல் தவறுதலாக அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அதனைத் தங்களுக்குத் தருமாறும் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோருக்குப் பழக்கமான கணக்குகள் மூலம் கேட்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் அந்த ஒருமுறை மறைச்சொல்லைப் பகிர்ந்தவுடன் மோசடி செய்பவர்கள் அதனைப் பயன்படுத்தி அவர்களின் கணக்கிற்குள் நுழைந்து, உண்மையான உரிமையாளரை கணக்கிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள்.

இதே முறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளுக்கும் இந்த மோசடி தொடரும். தங்களது கணக்கிலிருந்து தாங்கள் வெளியேற்றப்படும்போது அல்லது தங்களது நண்பர்கள் இது போன்ற விசித்திரமான ஒருமுறை மறைச்சொல் கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கும்போதுதான், தங்கள் கணக்கு முடக்கப்பட்டிருப்பதை பாதிக்கப்பட்டோர் உணர்கிறார்கள்.

இதுவரை பண இழப்பு ஏதும் பதிவாகவில்லை என்றாலும் ஒருமுறை மறைச்சொல் போன்ற முக்கியமான தகவல்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள தெரியாத சாதனங்களை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்துப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் ஈரடுக்கு அடையாள உறுதிப்படுத்தும் முறை (டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன்) வசதியைச் செயல்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்:

மேலும் ஸ்கேம்ஷீல்டு செயலியைப் பயன்டுத்துமாறும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

மோசடிக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும் என்றும் சந்தேகத்திற்கிடமான மோசடிகள் குறித்து அதிகாரிகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது.

ஏதேனும் சந்தேகம் இருந்தால், 24 மணிநேரமும் செயல்படும் 1799 எனும் எண்ணில் ஸ்கேம்ஷீல்டை அழைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்
வாட்ஸ்அப்மோசடிகாவல்துறை