மத்திய கிழக்கைப் போர் மேகங்கள் சூழ்ந்துகொள்ள, சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரேன் எனப் பல இடங்களில் சிக்கித்தவித்த சிங்கப்பூரர்கள் பலர், கடந்த வாரங்களில் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பினர்.
சிறப்பு விமானங்களில் பயணம் செய்த சிங்கப்பூரர்கள், அவர்களைக் கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்களின் படங்களைச் செய்திகளில் கண்டோம்.
ஆனால், எல்லைகள் கடந்து போர்ச்சூழல் நிலவிய இடங்களிலிருந்து சிங்கப்பூரர்களைத் தாயகம் அழைத்து வந்ததில் சிங்கப்பூர்த் தூதரக அதிகாரிகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்குண்டு.
இடர்களை முறியடித்து, சவாலான மீட்பு நடவடிக்கையை கச்சிதமாக ஒருங்கிணைத்த அந்த மீட்பு அதிகாரிகளின் அனுபவங்கள் இங்கே:
அசாதாரண பணிச்சூழலின் மத்தியிலும் அரும்பணி
மஸ்கட் தூதரகப் பேரிடர் மீட்புக் குழுவின் உறுப்பினர் சுப்ரமணியம் கணேசன், வழக்கமான வேலைக்களம் இல்லாத போதும் வழக்கத்தைக்காட்டிலும் விரைவாகச் செயல்பட வேண்டியிருந்ததாகச் சொன்னார்.
‘‘மடிக்கணினி அல்லது அலுவலக அறைகளில் அமர்ந்து வேலை செய்வதற்கான நேரமெல்லாம் இல்லை. ஆனால் கிடைத்த நேரத்தில் விரைவாகச் சிங்கப்பூரர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
“அச்சவால்களுக்கு மத்தியில் கனிவும் காணப்பட்டது. குறிப்பாக, சிங்கப்பூர் திரும்பக் காத்திருந்தவர்களில் மூதாட்டியும் ஒருவர்.
“தனியாகப் பயணம் வந்த அவரைப் பாதுகாப்பாக அழைத்து வர என்ன செய்யலாம் என்று யோசித்தவேளையில், மற்றொரு சிங்கப்பூரர் முன்வந்து அவரை விமான நிலையம் வரை அழைத்துச் சென்றது போன்ற நெகிழ்ச்சியான தருணங்கள் எங்கள் பணியைச் சாத்தியமாக்கின,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பல அமைப்புகள், அரசாங்கங்கள் மற்றும் பிற சிங்கப்பூரர்களுடனான ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது இந்த மீட்பு நடவடிக்கை என்றார் மஸ்கட்டில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகப் பொறுப்பாளர் மற்றும் அமைச்சர்நிலை ஆலோசகர் சையத் நூருதீன் சையத் ஹசிம் .
‘‘சிறப்பு விமானங்களுக்கான அனுமதிகளைப் பெறுவதும், எல்லைச் சிக்கல்களைத் தவிர்க்க அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதும் அவசியமாக இருந்தது.
“ஓமான், சவூதி அரசாங்கங்கள் முழு ஆதரவு அளித்தன. நல்ல வேளையாக அவை அனுமதிகளை விரைவாக வழங்கியது மீட்புக் குழுவின் பணிக்கு வலுச்சேர்த்தது,” என்றார் அவர்.
இதற்கிடையே, சிங்கப்பூரர்களை அழைத்துவர ஆகாயப் படையின் டேங்கர் ரக விமானம் பயன்படுத்தப்பட்டதன் காரணத்தைக் கூறினார் ரியாத் மீட்புக் குழுவில் இடம்பெற்றிருந்த சவூதி அரேபியாவுக்கான சிங்கப்பூர்த் தூதர் பிரேம்ஜித்.
சவூதி அரேபியாவில் உள்ள சிங்கப்பூரர்களைத் தாயகம் அழைத்து வருவதற்காக ரியாத்திற்கு மார்ச் 10ஆம் தேதி அனுப்பப்பட்ட சிங்கப்பூர் ஆகாயப் படையின் A330 வகை விமானம் சிங்கப்பூரர்கள், அவர்களைச் சார்ந்தோர் என 218 பேரை ஏற்றிக்கொண்டு பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியது.
‘‘போர் தொடங்கிய முதல் சில நாள்களில் விமானச் சேவைகள் தடைபடவில்லை. ஆனால் நாள்கள் செல்லச்செல்ல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அப்போது மீட்புக்குழு மாற்றுவழிகளை யோசித்தது. அதன் விளைவாக வேகம் மற்றும் உறுதித்தன்மைக்கு முன்னுரிமை அளித்து, சிங்கப்பூரர்களைத் தாயகம் அழைத்து வர சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் A330 வகை விமானம் பயன்படுத்தப்பட்டது,’’ என்று அவர் விவரித்தார்.
தூதரக அதிகாரிகளுக்குத் தோள்கொடுத்த வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள்
தூதரக அதிகரிகள் அயல்நாட்டுக் களத்தில் தீவிரமாகப் பணிகளைச் செய்ய, சிங்கப்பூரிலிருந்து சென்ற வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் சிங்கப்பூரர்களின் நலன் காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளக் கைகொடுத்தனர்.
கத்தார், பஹ்ரேனில் இருந்த சிங்கப்பூரர்களை அழைத்து வர, பேருந்துகளில் நீண்ட தூரம் அவர்களுடன் பயணம் செய்தனர் இக்குழுவினர்.
ரியாத் மீட்புக்குழுவில் உதவியாற்றிய வெளியுறவு அமைச்சின் மைக்கேல் லிம், போர் சூழந்த வட்டாரங்களிலிருந்து மீட்கப்பட்ட சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் உணர்வதற்காக, வட்டார எல்லையிலிருந்து ரியாத் வரும் வரை பேருந்தில் அவர்களுடனேயே பயணம் செய்ததாகச் சொன்னார்.
ரியாத் தூதரகப் பேரிடர் மீட்புக் குழு உறுப்பினரான ஜோனத்தன் ஓங், “இது ஒரு மனநிறைவான அனுபவம். அவர்களைப் பேருந்தில் ஏற்றுவது, விண்ணப்பப் பதிவுகளைச் சரிபார்ப்பது, தோஹாவிலிருந்து ரியாத்திற்குள் நுழைவதற்கான அனுமதிகளை உறுதிசெய்வது என்று ஒவ்வொரு நிலையிலும் உடனிருந்தோம். சக சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப உதவுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரிதும் மதிக்கிறேன்,’’ என்றார்.
ஓமானிலிருந்து ஜெட்டா செல்லக் காத்திருந்த மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்களுள் ஜெட்டா தூதரகப் பேரிடர் மீட்புக் குழு உறுப்பினர் முகமது ஃபைசல் அப்துல் ரஹீமும் ஒருவர்.
இவரது குழுவினர் மாணவர்களுடன் ஓமானிலிருந்து 26 மணி நேரப் பேருந்துப் பயணத்தை மேற்கொண்டனர். ‘‘மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது நெகிழ்ச்சியான தருணம்,’’ என்றார் அவர்.
மீட்புக் குழுவில் இடம்பெற்ற மற்றோர் அதிகாரி ஷெர்ரி லிம். “என்னைப் போன்ற அதிகாரிகள் வெளியுறவு அமைச்சுப் பணிகளில் இணைந்ததற்கான நோக்கமே சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் உதவ வேண்டும் என்பதுதான்.
“குறிப்பாக இந்தப் பணியைப் பொறுத்தவரையில், எத்தனை நாள், எங்கு வேலை என்றெல்லாம் தெரியாது.
“ஆனால் கள நிலவரம் ஒவ்வொரு நாளும் மாறியது. எனினும் நாங்கள் பல்வேறு தரப்பினருடன் ஒருங்கிணைந்து உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் தங்கும் காலம், பிறகு தரைவழியாக அவர்கள் அடைய வேண்டிய ஹோட்டல்களுக்குக் கொண்டுசேர்த்தல், குடிநுழைவு சார்ந்த அனுமதிகளைப் பெறுதல், இறுதியாகச் சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் அவர்களைப் பாதுகாப்பாக சேர்ப்பது என வேலைகள் நீண்டாலும், நாட்டு மக்களுக்காக ஆற்றிய இப்பணி மிகவும் அர்த்தமுள்ளது,’’ என்று குறிப்பிட்டார்.

