திருமதி வின்னி லீக்கும் அவரின் மகனுக்கும் திங்கட்கிழமை (ஜூலை 6) செய்த டாக்சி பயணம் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. பயணத்தின் பாதிவழியில், ஓட்டுநர் மயக்கமடைந்ததாகக் கூறப்பட்டது.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் டாக்சி ஆபத்தான முறையில் சென்றபோது தாமும் மகனும் அதிலிருந்து வெளியே குதித்ததாக டிக்டாக் சமூக ஊடகத்தில் திருமதி லீ பதிவிட்டிருந்தார். சாலையோரத்தில் உள்ள இரும்புத் தடுப்புக்கு அருகில் டாக்சி சென்றபோது கீழே குதித்ததாக அவர் குறிப்பிட்டார்.
சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்திலிருந்து தமது ஆறு வயது மகனுடன் டாக்சியில் ஏறிய பிறகு, பிற்பகல் 12.40 மணியளவில் சம்பவம் நடந்ததாக 36 வயதான அந்தத் தாய் ஏஷியாஒன் ஊடகத்திடம் தெரிவித்தார்.
“முதலில் ஓட்டுநர் கொட்டாவி விட்டார். அவர் தூக்கக் கலக்கத்தில் இருப்பதாக நான் நினைத்தேன். அதனால்தான் நான் அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன்,” என்று திருமதி லீ கூறினார்.
மதிய உணவிற்காகக் கணவரைச் சந்திக்க கிராஃபர்ட் லேனை நோக்கி விரைவுச்சாலையில் சென்றபோது, சாலையோரத் தடுப்புகளுக்கு அருகில் இருந்த புதர்கள் காரின் சன்னலில் உரசுவதை அவர் கவனித்தார்.
ஓட்டுநரிடம் திருமதி லீ கேட்டபோது அவர் முதலில் நன்றாக இருப்பதாகக் கூறினார். ஆனால் சற்று நேரத்தில் அவரிடமிருந்து பதிலேதும் வரவில்லை.
காரின் சன்னல்கள் தொடர்ந்து புதர்களில் உரசியபடி நீண்ட தூரம் செல்வதைத் திருமதி லீ கவனித்தார். ஓட்டுநருக்குப் பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் சந்தேகித்தார். அதன் பின்னர் காரிலிருந்து குதிக்க அவர் முடிவுசெய்தார்.
காரின் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து சாலையோர இரும்புத் தடுப்பின்மீது உரசியதன் மூலம் உராய்வை ஏற்படுத்தியதாகவும் கார் படிப்படியாக நின்றதாகவும் அவர் சொன்னார்.
ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மிகவும் வருந்துவதாய் நிறுவனம் தெரிவித்ததாகத் திருமதி லீ கூறினார்.

