ஏராளமான மலர்க்கொத்துகளை வாங்க ‘ஆர்டர்’ செய்தவர் திரும்பி வராததால் பூ வியாபாரிக்கு நஷ்டம் ஏற்பட்டது.
‘கிகி’ (Kiki Florist) என்னும் அந்த வியாபாரிக்குக் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8) முற்பகல் 11 மணிக்கு அழைப்பு ஒன்று வந்தது.
பிடோக்கில் உள்ள ராணுவ முகாமைச் சேர்ந்த தளவாடப் பிரிவிலிருந்து பேசுவதாகக் குறிப்பிட்ட மர்ம நபர், 150 சிறிய மலர்க்கொத்துகளையும் நான்கு பெரிய மலர்க்கொத்துகளையும் வாங்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவற்றின் மொத்த மதிப்பு $3,820.
இருவர் மட்டுமே வேலை செய்யும் சிறிய பூ வியாபாரத்திற்கு அது பெரிய ‘ஆர்டர்’.
ஆயினும், பூங்கொத்துகளைப் பெறுவதற்காகக் குறிக்கப்பட்ட புதன்கிழமை (செப்டம்பர் 10) பிற்பகல் 11 மணிக்குள் அவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மலர்க்கொத்துகளைத் தயார் செய்து கொடுப்பது சிரமம் என்று கூறப்பட்டதால், அந்த ‘ஆர்டர்’ 50 சிறிய மலர்க்கொத்துகளாக மாற்றப்பட்டது.
அதற்கு முன்பணம் எதுவும் தரப்படாது என்றும் மலர்க்கொத்துகளை நேரில் வாங்கும்போது $1,100 ரொக்கம் அளிக்கப்படும் என்றும் மர்ம நபரும் வியாபாரியும் ஒப்புக்கொண்டனர்.
அதன்படி, 50 சிறிய மலர்க்கொத்துகள் தயார்செய்யப்பட்ட பின்னர் குறித்த நேரத்தில் அந்த நபர் வரவில்லை.
நீண்ட நேரம் காத்திருந்த பின்னர் நிலைமையை உணர்ந்த பூ வியாபாரி, புக்கிட் தீமா கேஏபி கடைத்தொகுதியில் உள்ள தமது விநியோக மையத்தில் அந்த 50 மலர்க்கொத்துகளையும் மிகவும் மலிவான விலைக்கு விற்று நிம்மதி அடைந்தார். இருப்பினும் அவருக்கு $900 நஷ்டம் ஏற்பட்டது. பெரிய ஆர்டரை எடுத்திருந்தால் அவருக்குக் கிட்டத்தட்ட $4,000 நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
பூ வியாபாரத்தின் இணை நிறுவனரான திருவாட்டி ஜோசலின் லீ, இது மோசடிச் சம்பவமா அல்லது பொறுப்பற்ற வாடிக்கையாளரின் செயலா என்று தெரியாத நிலையில் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்போவதில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
இனியும் இதுபோல ஏமாறாமல் இருக்க, நிறுவனங்களின் ‘ஆர்டர்’களுக்கு முன்பணமும் கையெழுத்தும் பெறப்போவதாக அவர் கூறினார்.
போலி ‘ஆர்டர்’கள் மூலம் ஒரே வாரத்தில் இரண்டு சிறிய வர்த்தகர்கள் ஏமாற்றப்பட்டடு உள்ளனர்.
150 கோழி, இறைச்சி பிரியாணிப் பொட்டலங்களுக்கு ஆர்டரைப் பெற்று ஏமாந்துவிட்டதாக ‘முஹம்மது ஷாஸெய்ன் ஃபைஹா முஸ்லிம் ஃபுட் பேரடைஸ்’ என்னும் உணவுக்கடையின் உரிமையாளர் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) தெரிவித்து இருந்தார்.