பெண்களுக்கு அதிகாரமளித்தல் பெண்களை மட்டும் சார்ந்தது அல்ல.
அதற்கு ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் பங்கும் அவசியம் என்று சுட்டிக்காட்டினார் பிரதமர் அலுவலக அமைச்சரும் சிண்டாவின் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா.
“பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதால் குடும்பங்கள் வலுப்பெறுவதுடன் சமூகங்கள் மேம்படுகின்றன,” என்றார் அவர்.
எனவே ஒட்டுமொத்தச் சமுதாயமும் செழிக்கிறது என்று அமைச்சர் இந்திராணி குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) ஏற்பாட்டில் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்ற ‘ஷைன்ஸ்பையர்’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி, சிண்டாவின் முதன்மைத் திட்டங்களின் ஒன்றான ‘லெட் ஹெர் ஷைன்’கீழ் நடத்தப்பட்டது.
2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘லெட் ஹெர் ஷைன்’ திட்டம், ஏழு முதல் 35 வயது வரையிலான இந்தியப் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்புகளைப் பெறுவது, தனிப்பட்ட மற்றும் சமூகச் சவால்களைச் சமாளிப்பது முதலியவற்றின் தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தும் புவிசார் அரசியல் பற்றியும் இதுபோன்ற உரையாடல்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் குமாரி இந்திராணி எடுத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இளம் பெண்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான தன்னம்பிக்கை, ஆதரவு, வளங்கள், இடம் ஆகியவற்றை இதுபோன்ற உரையாடல்கள் உறுதி செய்யும்,” என்றார்.
‘வழக்கத்தை மாற்றுவோம். உங்கள் குரலுக்கு உரிமையளிப்போம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் மூன்று கலந்துரையாடல் அங்கங்களாக நிகழ்ச்சி படைக்கப்பட்டது.
‘பெண்’ என்ற அடையாளம், மனநலம், சமூக எதிர்பார்ப்புகள் போன்ற அம்சங்கள் அனைத்து அங்கங்களிலும் பேசப்பட்டன.
இதுபோன்ற உரையாடல்கள், பெண்கள் தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு அவற்றை நோக்கிச் செல்ல உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார் மீடியாகார்ப் ஆங்கில, தமிழ்ச் செய்திப் படைப்பாளரும் நிகழ்ச்சியின் பேச்சாளருமான இலக்கியா செல்வராஜி.
“இன்றைய பெண்கள் அதிகத் துணிச்சல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன தேவை என்பதையும் அவர்கள் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார்கள்,” என்றார் இலக்கியா.
குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு தடை இருக்கிறது என்பதை இந்தியச் சமூகம் தொடர்ந்து நம்புகிறது என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.
“இதுபோன்ற முயற்சிகள் மூலம் எந்தவொரு பெண்ணும் அத்தகைய தடைகளை முற்றிலுமாக ஒழிப்பதற்குரிய அதிகாரத்தைப் பெறமுடியும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

